14.30 மணிநேர சோதனைக்குப் பிறகு மாதிரிகள் அனுப்பி வைப்பு ஒன்றிய தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் நெய் ஆய்வு

* திருப்பதி லட்டில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

திண்டுக்கல்: திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யை குஜராத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்ததில் மாடு, பன்றி கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஒப்பந்தம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனம் நெய்யில் கலப்படம் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது. இதற்கு ஏ.ஆர். டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவன தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா, நிறுவனத்தின் கழிவுநீரை ஆய்விற்காக எடுத்து சென்றார்.

இதைத் தொடர்ந்து, ஒன்றிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி ரவி முருகேசன், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு ஏ.ஆர். டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் ஆய்வை துவக்கினார். காலை 9 மணிக்கு துவங்கிய சோதனை நள்ளிரவு 11.30 மணி வரை என 14.30 மணி நேரம் தொடர்ந்தது.

ஆய்வுக்குப் பின் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி முருகேசன் கூறுகையில், ‘‘திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய், பால், பால்கோவா போன்றவற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஒன்றிய அரசின் தர கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு நெய்யின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். ஆய்வு முடிவில் விலங்கு கொழுப்பு கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post 14.30 மணிநேர சோதனைக்குப் பிறகு மாதிரிகள் அனுப்பி வைப்பு ஒன்றிய தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் நெய் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: