அரசு வேலைக்கு ரூ.65 லட்சம் லஞ்சம் அதிமுக மாஜி அமைச்சர் மீது விஜிலென்ஸ் வழக்குப்பதிவு: மகள் மீதும் 4 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது

சேலம்: சமையல் வேலை தருவதாக கூறி, 20 பேரிடம் ரூ.65 லட்சம் லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மீது, சேலம் விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் கோரைப்பாய் வியாபாரி முனுசாமி. இவர் கடந்த ஆண்டு மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில், ‘சேலம் மாவட்டஆதி திராவிடர் நலத்துறை ஆசிரியர் வெங்கடேசன் மூலம் 2013 அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த என்.சுப்பிரமணியன் அறிமுகமானார்.

அவர் சேலம் ஆதி திராவிடர் நலத்துறைக்கு சமையல் பணிக்கு 20 பேருக்கு சேலம் மாவட்டத்தில் பணி ஆணை வழங்க உள்ளதாகவும், தலா ரூ.3 லட்சம் தருபவர்களுக்கு பணி வழங்குவேன் என்றும் கூறினார். அதன்படி எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் 20 பேர் மூலம் 2015ல் ரூ.65 லட்சத்தை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கொடுத்தோம். அதை அவர் மகள் லாவண்யாவிடம் கொடுத்தார். ஆனால் வேலை வாங்கி கொடுக்கவில்லை. 2016ல், அவருக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கவில்லை.

அதன்பின் ரூ.23.50 லட்சத்தை மட்டும் கொடுத்தார். மீதி ரூ.41.50 லட்சத்தை கேட்டதற்கு அடியாட்கள் வைத்து, அடித்து மிரட்டினார்.  கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள், மகன் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரவேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

என்.சுப்பிரமணியன் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கப்பட்டுள்ளதால் அது லஞ்சமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் பரிந்துரைத்தார். இதையேற்று சென்னை லஞ்சஒழிப்புத்துறை இயக்குநர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா ஆகியோர் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அரசு வேலைக்கு ரூ.65 லட்சம் லஞ்சம் அதிமுக மாஜி அமைச்சர் மீது விஜிலென்ஸ் வழக்குப்பதிவு: மகள் மீதும் 4 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: