திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டூர் (ஊராட்சி) கிராம பாலாற்றிலிருந்து பக்கத்து ஊராட்சியான கிளாப்பாக்கம் ஊராட்சிக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல அரசு நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாண்டூர் பாலாற்றில் ஆழ்துளை கிணறுக்காக போர் போடும் பணி ஆரம்பித்தது. அப்போது, பாண்டூர் பொதுமக்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பாலாற்றை ஒட்டியுள்ள எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக கடும் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது.
இதனால், நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, முதலில் எங்கள் ஊருக்கான குடிநீர் பிரச்னையை தீர்த்துவிட்டு, எங்கள் ஊர் பாலாற்றிலிருந்து மற்ற ஊருக்கு தண்ணீர் எடுத்துச்செல்லுங்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து போர்போடும் பணியை தடுத்து நிறுத்தினர். ‘போர் போடுவதும், அதை தடுத்து நிறுத்துவதும்’ ‘தொடர் கதையாக உள்ள நிலையில், இதுதொடர்பாக பாண்டூர் பொதுமக்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வுகாண நேற்று திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் முன்னிலையில் பாண்டூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பொதுமக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, ‘எங்கள் கிராம பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். எங்கள் கிராமத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துவிட்டு, மற்ற கிராமங்களுக்கு குடிநீர் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாசில்தார் ராதா, ‘என்னிடம் சத்தமாக பேசாதீர்கள், எல்லோரும் வெளியே போங்க இல்லையேல் போலீசை வரவழைத்து அடித்து விரட்டுவேன்’ என்று ஒருமையில் பேசினார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post குடிநீர் பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒருமையில் பேசிய தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.