இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலை திட்டமாக கருதப்பட்ட இந்த திட்டத்தை, ஜனவரி 8, 2009ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையில், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். சுமார் ரூ.1,815 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்தத் திட்டம் 20 கி.மீ தொலைவுக்குக் கூவம் ஆற்றின் வழியே அமைக்கத் திட்டமிடப்பட்டு, பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. மதுரவாயல், சேத்துப்பட்டு பகுதிகளிலும், கூவம் நதியிலும் உயர்மட்ட சாலைக்கான தூண்கள் முழுவீச்சில் கட்டப்பட்டு வந்தன.
பறக்கும் சாலைத்திட்டத்தின் 15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், 2011ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அதிமுக தலைமையில் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, “கூவம் நதியில் அமைக்கப்படும் பறக்கும் சாலை திட்டத்தால் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், எனக் கூறி பறக்கும் சாலைத் திட்டத்துக்குத் தடை ஏற்படுத்தினார். மேலும், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருந்த அனுமதியையும் எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் மேம்பால சாலை திட்டம் ரூ.5509 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.
மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. இந்நிலையில் 2 அடுக்கு உயர்மட்ட சாலை பணியை 2026க்குள் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு பறக்கும் மேம்பால திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
21.745 கிலோ மீட்டர் தூர உயர்மட்ட சாலை அமைக்கும் பணி 4 கட்டங்களாக முழுவீச்சில் நடைபெறுகிறது. முதல் பிரிவு 4.946 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1388 கோடியிலும், 2வது பிரிவு 5.906 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1616 கோடியிலும், 3வது பிரிவு 4.485 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1299 கோடியிலும், 4வது பிரிவு 6.408 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1205 கோடியிலும் பணிகள் நடைபெற்ற உள்ளது. இந்த 4 கட்டங்களாக பிரிவிக்கப்பட்ட பணிகள் 2026ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதிக்குள் முடிக்கப்படும். இதற்கான கட்டுமான பணிக்கு ஜே.குமார் இன்ப்ரா ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ரூ.5509 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை பணிகளை 2026க்குள் முடிக்க திட்டம்: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.