என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டம்

நெய்வேலி, செப். 19: நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. என்எல்சி இந்திய நிறுவனத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் என்எல்சி நிர்வாகம் என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் ஊதியமான ரூ.20,000 மட்டுமே போனசாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க கோரி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர், பொதுச் செயலாளர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் சுமார் 2,000க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து பேரணியாக என்எல்சி சுரங்க நிர்வாக அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் எதிரில் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது என்எல்சி நிர்வாகம் 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தை முன்னிட்டு நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கியதைப் போலவே, இந்த ஆண்டும், வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன், 1965ம் ஆண்டு போனஸ் சட்டத்தின்படி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் போனஸ் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்யும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: