சிதம்பரம் ஞானப்பிரகாச குளத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பல் உற்சவம்

சிதம்பரம், ஜன. 17: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த இரண்டு விழாக்களின் போதும், மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் கடந்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 12ம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் கடந்த 13ம் தேதி நடந்தது. 14ம் தேதி முத்து பல்லக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நடராஜர் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் சுமார் இரண்டு கி.மீ. தொலைவில், ஞானப்பிரகாசம் குளம் உள்ளது. இக்குளத்தில் ஆனி மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன காலத்தில் முத்துப்பல்லக்கு திருவிழாவிற்கு அடுத்த நாளில், நடராஜர் கோயிலின் உற்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி குளத்தை வலம் வரும் தெப்பல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். குளம் பராமரிப்பின்றி இருந்து வந்ததால், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தெப்போற்சவம் நடைபெறாமல் இருந்தது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோரின் முயற்சியால் ₹2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளம் தூர்வாரப்பட்டது. இதையடுத்து ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் சந்திரசேகரர், கீழ வீதி மற்றும் மாலைக்கட்டி தெரு வழியாக ஊர்வலமாக தெப்பக்குளத்திற்கு வந்தார். முன்னதாக நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் நன்றி செலுத்தும் விதமாக, நகரமன்ற தலைவர் செந்தில்குமாருக்கு மரியாதை செலுத்தினர், நகராட்சி ஆணையாளர் மல்லிகா மற்றும் பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதை தொடர்ந்து தெப்ப உற்சவத்தில் நடராஜர் கோயில் உற்சவரான சிவகாமசுந்தரி அம்பாள், சந்திரசேகரர் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில், நகர காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் உதவி ஆய்வாளர் பரணிதரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post சிதம்பரம் ஞானப்பிரகாச குளத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பல் உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: