புதுச்சேரி, ஜன. 22: புதுச்சேரி சிறுமியின் போட்டோவை மார்பிங் செய்து உல்லாசத்துக்கு அழைத்த திருவாரூர் வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் மீது பல பெண்கள் புகார் அளித்துள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிமுகமான நபர் நண்பராகி பேசி பழகி வந்துள்ளார். சிறிது நாட்களுக்கு பிறகு அந்த நபர் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனை சிறுமி ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த அந்த நபர், சிறுமியின் போட்டோவை மார்பிங் செய்து அவருக்கு அனுப்பியுள்ளார். மேலும், இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்றும், சிறுமியை உல்லாசத்துக்கு வரவேண்டும் என்றும், ஆடையில்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் செய்யுமாறு மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிறுமியை உல்லாசத்துக்கு அழைத்த நபர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருமாகோட்டை, கடைத்தெரு பகுதியை சேர்ந்த ஷாஜகான் மகன் முஜீப் அலி (30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இதில் 2020ம் ஆண்டிலிருந்து பல்வேறு பெண்களை ஆடை இல்லாமல் வீடியோ காலில் வரச்சொல்லி அதனை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு மிரட்டியதும், 10க்கும் மேற்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் 5க்கும் மேற்பட்ட பேஸ்புக் ஐடியை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவருடைய செல்போனில் 20க்கும் மேற்பட்ட பெண்களுடைய புகைப்படங்கள் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் முஜீப் அலி மீது போக்சோ வழக்குப்பதிந்து தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட முஜீப் அலியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் சைபர் கிரைமில் புகார் அளித்து வருகின்றனர். இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post செல்போனில் 20 பெண்களின் ஆபாச படங்கள் appeared first on Dinakaran.