காலாப்பட்டு, ஜன. 17: கடலில் ராட்சத அலையில் சிக்கிய பல்கலை மாணவரை அலைசறுக்கு வீரர் மீட்டார். புதுவை அருகே காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர் படித்து வருகிறார். இவர் கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பம் கடற்கரையில் நேரம் கிடைக்கும்போது குளிப்பது வழக்கம். காணும் பொங்கலான நேற்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
நீச்சல் தெரிந்த கேரளா மாணவரும் குளித்துக் கொண்டிருந்தார். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலையில் சிக்கினார். நீந்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவர் கைகளை உயர்த்தி, கரையில் இருப்பவர்களிடம் உதவி கேட்டு செய்கை மூலம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
அப்போது அருகில் அலைசறுக்கு பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர் குரு, அலைசறுக்கு விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் போர்டை கொண்டு கடலுக்குள் சென்றார். அங்கு தத்தளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவரை மீட்டு தந்திராயன்குப்பம் மீனவர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள், அலை சறுக்கு வீரர் குருவுக்கு கை கொடுத்து நன்றி மற்றும் பாராட்டை தெரிவித்தனர். விடுமுறை தினமான நேற்று காலை நேரத்தில் சூரிய உதயம் பார்க்க வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post கோட்டக்குப்பம் கடலில் ராட்சத அலையில் சிக்கிய பல்கலை மாணவரை மீட்ட அலைசறுக்கு வீரர் appeared first on Dinakaran.