ஈரோடு : தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் ஆசனூரில் சூரிய மின் ஆற்றல் மூலம் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையத்தின் மூலம் 1,000 பழங்குடியினர் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 5 தாலுகாவில் 77 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் முதன்மை பயனாளிகளாக பயன் பெற தகுதி உடையவர்கள். பெண்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் மகளிர் விவசாய உற்பத்தியாளர்களை கொண்டு 86 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.6 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் குழுக்களுக்கு வழங்கப்பட்டு விவசாய உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றனர்.
இதில் ஆர்வமுள்ள உற்பத்தியாளர் பெண்களை கொண்டு 2 உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு ரூ.30 லட்சம் வீதம் ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இணை மானிய திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 174 நபர்களுக்கு புதிததாக தொழில் அமைப்பதற்கும் மற்றும் தொழில் மேம்படுத்துவதற்கும் 30 சதவீதம் ரூ.2.6 கோடி மானியத்துடன் ரூ.5.90 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கி தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பழங்குடியினர் மக்களுக்கு தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.
இதில், தாளவாடி தாலுகா ஆசனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோட்டாடை மலை குக்கிராமத்தில் கலெக்டரின் சீரிய வழிகாட்டுதலின் படி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.7.25 லட்சத்தில் சூரிய மின் ஆற்றல் மூலம் நேரடியாக இயங்கும் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையம் கொள்கலன் வடிவில் சிறு தானிய கல், மண் பிரிக்கும் இயந்திரம், பாலீஸ் செய்யும் இயந்திரம் மற்றும் சிறு தானிய மாவு ஆக்கக்கூடிய இயந்திரம் நேரடியாக சூரிய மின் ஆற்றலில் இயங்க கூடிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து இயந்திரங்களும் நாளொன்றுக்கு 200 கிலோ வீதம் அரைக்கக்கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசனூர் ஊராட்சி பழங்குடியினர் சூரிய மின் ஆற்றல் சிறுதானிய தொழில் குழு மூலம் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின், மூலம் பயன்பெறும் ஆசனூரை சேர்ந்த வசந்தா மற்றும் லதாமணி கூறியதாவது:
பழங்குடியினர் கிராம மக்களை கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வழிகாட்டுதலின் படி 15 உறுப்பினர்களை கொண்டு ஆசனூர் பழங்குடியினர் சிறு தானிய தொழில் குழு அமைத்துள்ளோம். சூரிய மின் ஆற்றல் மூலம் நேரடியாக இயங்கும் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையம் அனைத்து பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோட்டாடையில் அமைத்து செயல்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் முதன்முதலாக பழங்குடியினருக்காக சூரிய ஒளியில் செயல்படும் வகையிலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
சூரியமின் ஆற்றல் மூலம் நேரடியாக இயங்கும் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையம் எங்கள் கிராமத்திற்கு வந்த பின் இங்குள்ள 1000 குடும்பங்கள் இதில் பயன்பெற்று வருகின்றனர். மேலும், இவ்வாறு எங்கள் மலை கிராமங்களில் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையம் இருப்பதனால் அழிந்து வரும் சிறு தானிய பயிர்கள் அழியாமல் இருப்பதற்கும், இயற்கையான ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்களை பயிரிடுவதற்கு இந்த மதிப்புக்கூட்டும் மையம் உந்து சக்தியாக உள்ளது.
எங்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு வழிகாட்டிய தமிழக முதல்வருக்கு எங்கள் பழங்குடியினர் சூரிய மின்னாற்றல் சிறுதானிய தொழில் குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் ஆசனூரில் சூரிய மின் ஆற்றல் மூலம் சிறு தானிய மதிப்பு கூட்டும் மையம் appeared first on Dinakaran.