செம்பனார்கோயில் பகுதியில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

 

செம்பனார்கோயில், செப்.14: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், தற்போது சம்பா சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், முன்பு பெரும்பாலும் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் நடைபெற்றது. ஆனால் இன்றைய கால சூழ்நிலை காரணமாக சம்பா, குறுவை சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மட்டும் தாளடி சாகுபடியும் நடைபெறுகிறது. இந்நிலையில் குறுவை அறுவடை முடிந்த வயலில் தற்போது சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இதற்காக பம்புசெட் மூலம் வயலில் தண்ணீர் பாய்ச்சி, நிலத்தை நன்கு உழுது, வயல் விதைப்புக்கு பக்குவமான பிறகு ஆடுதுறை கோ-51ஏ ரக நெல் விதைகளை தூவி வருகிறோம். அதைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தை மாத அறுவடைக்கு சம்பா நெல்லை தயார்படுத்துவோம். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சம்பா விதைப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post செம்பனார்கோயில் பகுதியில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: