காவேரிப்பட்டணம், மார்ச் 14: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பையூரில் அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பையூர் நடேசன் கடை அருகே, 100 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து கட்சியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். வழி நெடுகிலும் பொதுமக்கள் துணை முதல்வரை வரவேற்றனர்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் தினேஷ்குமார், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், முருகன், டிஆர்ஓ சாதனைக்குறள், எஸ்பி தங்கதுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தனித்துணை கலெக்டர் அபிநயா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
