பாண்டுரங்கன் வருகை

பக்த விஜயம் 2

புண்டரீகன், தன் பெற்றோர்களைக் கங்கையில் நீராட வைத்து, அவர்கள் பாதம் பட்ட நீரில் தானும் நீராடினான். அவர்களுக்குத் தேவையான பணிவிடைகள் அனைத்தையும் செய்து முடித்தபின், அவர்களிடம் அனுமதி பெற்று குக்குட முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அங்கு போனதும், குக்குட முனிவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். மந்திரோபதேசம் செய்யும்படி பணிவுடன் வேண்டினான். குக்குட முனிவரும் மனம் மகிழ்ந்து, புண்டரீகனுக்கு மந்திர உபதேசம் செய்து, ஆன்மிக ரகசியங்களையும், உணர்த்தினார். புண்டரீகனுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டானது. தனக் குண்டான சந்தேகங்களையெல்லாம் குக்குட முனிவரிடம் கூறி, தெளிவு பெற்றான். அதன்பின், குக்குட முனிவர் சீடனுக்குச் செய்யவேண்டிய ‘பூர்ணாபிஷேகம்’ என்ற வைபவத்தைப் புண்டரீகனுக்குச் செய்து வைத்தார். அவரிடம் அனுமதி பெற்றுத் திரும்பினான் புண்டரீகன்.

திரும்பியவன், பெற்றோர்களை வணங்கி நடந்ததையெல்லாம் அவர்களிடம் சொல்லி மகிழ்ந்தான். பிறகு, பெற்றோர்களைக் காவடியில் சுமந்துகொண்டு, பண்டரிபுரம் திரும்பினான். நாள்தோறும் அதிகாலையில் எழுவதும், பெற்றோர்களைச் சந்திரபாகா நதிக்குத் தூக்கிப் போய், அவர்களை நீராட்டிப் பாத பூஜை செய்வதும், பிறகு வீடுதிரும்பிப் பெற்றோர்களுக்கு அறுவகையான ருசிகள் கொண்ட உணவு வகைகளை உண்ணச் செய்து, அதன்பின் அவர்களைப் படுக்க வைப்பது, அதன்பிறகே தான், உண்பது எனப் புண்டரீகனின் நாட்கள் கழிந்துக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில்… பண்டரிபுரத்திற்கு அருகேயுள்ள கோபாலபூர் எனும் ஊரிலிருந்த, ‘சந்த்ராவளி’ எனும் ஓர்உத்தமி, ‘‘கண்ணனையே மணம்செய்து கொள்வேன். வேறு யாரையும் ஏற்க மாட்டேன்’’ என்று தீவிரமாக இருந்தாள். அவளுக்கு முப்பது வயதாகியும், திருமணம் நடைபெறவில்லை.

பெற்றோர், கவலைப் பட்டார்கள். அவளோ, எந்நேரமும் கண்ணன் திருநாமத்தைச் சொல்வதும், கண்ணனைத் தியானம் செய்வதுமாக இருந்தாள். சந்த்ராவளியின் கடுந்தவம் கண்ணனை அவள் முன்னால் நிறுத்தியது. காட்சியளித்த கண்ணன், ‘‘உத்தம பக்தையே! உன் விருப்பம் என்ன? கேள்!’’ என்றார். அந்த நேரத்தில்… கண்ணனைக் காணாமல் தேடிக் கொண்டிருந்த ருக்மணி அங்கே வந்து, அந்தக் காட்சியைக் கண்டாள். கோபம் வந்தது அவளுக்கு. உடனே அங்கிருந்து புறப்பட்ட ருக்மணி, திண்டிரவனத்தில் தங்கிக் கடுமையாகத் தவம் செய்யத் தொடங்கினாள். அதே சமயம் கண்ணன், ‘‘சந்த்ராவளி! ருக்மணியை அமைதிப்படுத்திவிட்டு வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். புறப்பட்டவர், திண்டிரவனத்திற்கும், பண்டரிபுரத்திற்கும் அருகில் ஓடும் சந்திரபாகா நதியில் இறங்கி, எதிர்க்கரையில் ஏறினார்.

அங்கே…
பூர்ண பிரம்ம ஞானியான புண்டரீகன், தன் பெற்றோர்களை மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ட கண்ணன், ‘‘ஆகா! உத்தமமான பக்தன் இவன்!’’ என்று ஆனந்தம் கொண்டார். ருக்மணியை மறந்தார்; அசைவில்லாமல் நின்றுவிட்டார். குரல் கொடுக்கத் தொடங்கினார் கண்ணன்; ‘‘புண்டரீகா! தாய் – தந்தையர்களுக்குச் சேவை செய்வதற்கு, நீ ஒருத்தன்தான் இந்த உலகில் பிறந்திருக்கிறாய். குரு பக்தியில் உனக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. உன்விரதத்திற்கு இணங்கியே வந்தேன்.

அரிய சேவை தந்தேன். உனக்குத் தேவையான வரத்தைக் கேள்!’’ என்றார். தாய் – தந்தையர்க்குப் பணிவிடை செய்துக் கொண்டிருந்த புண்டரீகன், திரும்பிப் பார்க்கவில்லை. ‘‘நீங்கள் யார்?’’ எனக் கேட்டான்.அங்கே, தரையெல்லாம் ஈரமும் சேறுமாய் இருக்க, அதன் நடுவில் நின்றபடிக் கண்ணன் பதில் சொன்னார்; ‘‘ஒப்பில்லாத உத்தமனே! வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக அவதரித்த பகவான் நான் என்பதை அறிந்து கொள்!’’ என்றார்.

புண்டரீகனுக்கு மெய் சிலிர்த்தது;‘‘கண்ணா! பரந்தாமா! நான் உங்களை நினைக்காமல் இருந்தாலும், நீங்களாகவே அடியேனுக்குக் காட்சி தந்தீர்களே! ரொம்ப நேரமாய்ச் சேற்றிலே நின்று நொந்து போய்விட்டீர்களா?’’ என்று பக்தியுடன் கேட்டு, ஒரு செங்கல்லை எடுத்துப் பகவான் முன் இட்டான்.‘‘பகவானே! இந்தச் செங்கல்லின் மீது சற்று நில்லுங்கள்! பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய பூஜையை முடித்துத் தேவையான வரத்தைப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்றான் புண்டரீகன். கண்ணனும் அப்படியே செய்தார். அவ்வளவுதான்! அதன்பிறகுப் புண்டரீகன் தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டான். தாய் – தந்தையர்களுக்குச் செய்யவேண்டியதை அன்போடு செய்து முடித்த புண்டரீகன், வழக்கப்படி அவர்களைக் காவடியில் வைத்துத் தூக்கிக் கொண்டான். அதன் பிறகே கண்ணன் பக்கம் திரும்பினான்.

‘‘பகவானே! கண்ணா! என் பெற்றோர்களை வீட்டில் கொண்டு போய், அவர்களுக்கு உணவு ஊட்டி விட்டு வருகிறேன். அதுவரை ‘இங்கேயே இருக்கிறேன்’என்ற வரத்தை முதலில் தந்து என்னை அனுப்புங்கள்!’’ என வேண்டினான் புண்டரீகன். கருணை வடிவான பகவான், ‘‘உத்தம பக்தா! புண்டரீகா! நீ வருகிறவரை, ஓரடி கூட நகராமல் உன் வரவுக்காக இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமாக வா!’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தார். பகவானை வணங்கிய புண்டரீகன், பெற்றோர்களைச் சுமந்து கொண்டு வீடு திரும்பினான்.

அங்கு போனதும், பெற்றோர்களுக்கு உணவு முதலியவைகளை ஊட்டினான், புண்டரீகன். அதன்பின் அவர்களை வணங்கி, ‘‘தாயே! தந்தையே! பகவான் நாராயணர், சந்திரபாகா நதிக்கரையில் எழுந்தருளி இருக்கிறார். நீங்கள் அனுமதி கொடுத்தால், நான் போய் அவரிடம் தேவையான வரங்களைப் பெற்று வருகிறேன்’’ என்றான். அதற்குப் பெற்றோர்கள், ‘‘புண்டரீகா! நீ ஒருவன் மட்டும் பகவானைத் தரிசித்து வரங்களைப் பெற்றுக் கொள்வதால், என்ன பலன்? உலகிலுள்ளோர் அனைவரும் தரிசித்துப் புண்ணிய வரங்கள் பெறும்படியாக இருந்தால் அல்லவா நல்லது! அதற்கான ஏற்பாடுகளைச் செய்!’’ என்றார்கள்.

‘‘மகா பாக்கியம்! மகா பாக்கியம்! தங்கள் கட்டளைப்படியே பகவானைப் பண்டரீபுரத்திலேயே தங்கச் செய்வேன்’’ என்ற புண்டரீகன், பெற்றோர்களை வணங்கிப் புறப்பட்டான்.
போகும் வழியெல்லாம் புண்டரீகனுக்குப் பகவான் தியானம்தான்; ‘‘கண்ணனை தரிசிக்கப் போகிறோம். நாம் அருகில் சென்றவுடன், ‘‘வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்!’’ என்று சொல்லிப் பகவான் வரம் தந்துவிட்டு உடனே மறைந்துவிட்டால் என்ன செய்வது? பெற்றோர்கள் வாக்கிற்கு இடையூறு வந்து விடுமே!’’ என்று எண்ணியபடியே கண்ணன் நின்றிருந்த இடத்திற்கு மிக அருகில், கைகளை கூப்பி சமாதி நிஷ்டையில் நின்றான்.

புண்டரீகனுக்குச் சமாதி நிலை கை கூடியது; உடல் பற்றை மறந்து, பிரம்மானந்த நிலையில் ஆழ்ந்தான். ஏராளமானோர் கூடினார்கள். அத்தனை நபர்களுக்கும் காட்சியளித்த பகவான், புண்டரீகன் எண்ணப்படி, பண்டரீபுரத்திலேயே அனைவரும் தரிசிக்கும் படியாக எழுந்தருளினார். அந்தத் திருக்கோலத்திலேயே இன்றும் அடியார்க்குத் தரிசனம் தந்து அல்லல்கள் நீக்கி அருள் புரிகிறார். பகவான், பண்டரீபுரத்திற்கு வந்த வரலாறு இது.

The post பாண்டுரங்கன் வருகை appeared first on Dinakaran.

Related Stories: