சஞ்சலத்தை போக்கும் தபோவனம்

எனக்கு மனம் சஞ்சலம் ஏற்படும் போதெல்லாம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த தபோவனத்துக்கு சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்வேன். என்னுடைய சஞ்சலமும் நீங்கும். சில வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை. இரவில் ஸ்வாமிகளை தரிசித்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு காலையில் சென்னைக்கு புறப்பட திட்டமிட்டேன். சனிக்கிழமை காலை ஸ்வாமிகளை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று இருந்தேன். ஸ்வாமிகளுக்கு அருகில் வந்ததும் அவரை நமஸ்கரித்து கையை நீட்டினேன் பிரசாதத்திற்கு. ஸ்வாமிகள் புன்னகைத்தவாறே இப்பவே புறப்பட உத்தேசமா என்று கேட்டார். நானும் தயங்கியபடியே ஆமாம் குருநாதா என்றேன். ஸ்வாமிகள் உடனே இன்று இரவு ஹனுமான் சந்நதியில் சிறப்புப் பூஜை நடைபெறும். அதில் கலந்துகொண்டு நாளை புறப்படு என்றார், ஸ்வாமிகளின் கட்டளையை மீறாமல் நானும் சரி என்றேன். அச்சமயம் நான் ஆசிரியராகச் சென்னையில் பணியாற்றியிருந்தேன்.

அன்று மாலை வேளை ஸ்ரீ ஹனுமனுக்கு புஷ்ப அலங்காரமும் வடை மாலையும் அர்ச்சகர் சார்த்தியிருந்தார். ஹனுமான் சந்நதியில் நல்ல பக்தர்கள் கூட்டம். சுவாமியைத் தரிசித்தபடி சந்நதியில் நின்றிருந்தேன். அப்போது அர்ச்சகர் என்னிடம் இன்றைக்கு ஸ்திர வாரமா(சனிக்கிழமை) இருக்கு, அதனால ஸஹஸ்ரநாமம் பண்ணலாமுன்னு இருக்கேன். புஸ்தகம் தரேன் நீங்க நாமாவளியை வாசிங்கோ என்றார். நானும் ஒப்புக்கொண்டு முக்கால் மணிநேரத்தில் அர்ச்சனை முடிந்தது. அப்போது சந்நதியில் தொளதொள வென்று பெரிய ஜிப்பா பைஜாமா வெளுத்த நிலையில் அணிந்த பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். எனக்கு ஞான ஒளி அவர் கண்களில் தென்பட்டது. அர்ச்சகர் அவரை வணங்கினார்.

பெரிய வரும் அவரைப் புன்னகைத்தபடி ஆசிர்வதித்தார். அப்போது அவர் யார் என்று கேட்க எனக்குத் தோன்றவில்லை. சுவாமிக்கு நிவேதனம் பண்ணி கற்பூர ஆரத்தி காட்டினார். அனைவரும் கண்ணில் ஒற்றிக்கொண்டோம். சுவாமிக்கு என்ன நிவேதனம் என்று பிரசாத பாத்திரத்துடன் வந்த அர்ச்சகரிடம் கேட்டேன். அவர் வெண் பொங்கல் என்றார்.
நான் ஆதங்கத்துடன் எப்பவும் ஸ்வாமிக்கு சக்கரைப் பொங்கல், புளியோதரை எல்லாம் நிவேதனம் பண்ணுவேளே, ஏன் வெண்பொங்கலோடு நிறுத்தி விட்டேள் என்றேன்.

அவரும் வாஸ்துவம்தான், நம் பரிசாரகர் திருக்கோவிலூர் போயிட்டு வெகு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று சொன்னவர் வரவில்லை. அதனால் என்னால முடிந்த அளவுக்கு வடையைத் தட்டி வெண்பொங்கல் பண்ணினேன். ஆனா நான் நிவேதனம் பண்ணும் போது சக்கரை பொங்கல், புளியோதரை, எள்ளோரை என்று சொல்லி நிவேதனம் பண்ணிட்டேன் சுவாமி ஏற்றுக் கொண்டிருப்பார் என்று சொல்லி என் கையில் வெண் பொங்கலைக் கொடுத்தார்.

எனக்கு பொறுக்கவில்லை. அர்ச்சகரிடம் ஒரு பேரைச் சொல்லி மற்ற ஒரு பொருளை வைத்து நிவேதனம் பண்றது தப்பு அல்லவா! சுவாமி எப்படி ஏற்றுக் கொள்வார் என்று நான் வாதிட்டேன். அர்ச்சகர் புன்னகைத்துக் கொண்டார்.நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைச் சற்று தூரத்தில் பைஜாமா போட்ட பெரியவர் கவனித்துக் கொண்டு ஆங்கிலத்தில் அருகில் இருந்தவரிடம் கேட்டுக் கொண்டார். அர்ச்சகர் பைஜாமா பெரியவரிடம் பிரசாதம் கொடுக்க பவ்யமாக நின்றார். அந்த பெரியவர் தன் இரு கைகளையும் சேர்த்து குழித்து காட்டினார். அர்ச்சகர் கை நிறைய பொங்கலை எடுத்து வைத்தார். பெரியவர் கோகர வ்ருத்தியாக (பசு மாடு உண்பது போன்று) அதை அப்படியே சாப்பிட்டார். அனைவருக்கும் பிரசாதம் கொடுத்த அர்ச்சகர் மீண்டும் பெரியவரிடம் கைநிறைய பொங்கலை கொடுத்தார்.

அர்ச்சகர் அந்த பெரியவரிடம் குருவின் உச்சிஷ்டமான பிரசாதம். அனுக்கிரஹம் பண்ணணும் என்றார். அவரும் சந்தோஷமாக அர்ச்சகரிடம் இரு கைகளையும் நீட்டி எடுத்துக்கொள் என்றார். அதிலிருந்து ஒரு கோலி உருண்டை அளவு பொங்கலை வாயில் போட்டுக் கொண்ட அர்ச்சகருக்கு அளவில்லா சந்தோஷம்.அமிர்தம், தேவாமிர்தம் என்று சொல்லியபடியே அர்ச்சகர் என்னிடம் வந்து சாதுக்கள் உண்ட உச்சிஷ்ட ஜென்மாந்திர புண்ணியம் இருக்கத்தான் இருக்கு போங்கோ நீங்களும் வாங்கி சாப்பிடுங்கோ என்றார். நானும் பைஜாமா பெரியவரை வணங்கி உச்சிஷ்ட பிரசாதத்திற்கு கை நீட்டினேன். எனக்கு ஜாடை காட்டியபடி எடுத்துக்கொள் என்றார்.

நானும் ஒரு கோலி உருண்டை அளவிற்கு முதலில் எடுத்து சாப்பிட்டேன் என்ன ஆச்சரியம்! அது சக்கரைப் பொங்கலாக இனித்தது. மீண்டும் ஜாடை காட்டி எடுத்துக்கொள் என்றார், பரவசப்பட்டேன் அது புளியோதரையாக இருந்தது, மீண்டும் கொஞ்சம் எடுத்து கொண்டேன் பிரமித்து விட்டேன். அது எல்லோரையாக (எள் சாதம்) இருந்தது. நான் அந்த பைஜாமா பெரியவரின் காலில் விழுந்து உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டேன். அவர் என் முதுகில் தட்டி என்னை பார்த்து புன்னகை செய்தார்.

என் அருகில் வந்த அர்ச்சகரிடம் என்னை மன்னிக்கணும், நான் எதோ தெரியாம ஸ்வாமிக்கு முன்னாடி பிரத்தியட்சமா வைக்காத நிவேதனம் பேரை மாத்திரம் சொல்லி நிவேதிச்சா எப்படி ஸ்வாமி ஏத்துப்பார் என்று வீம்புல கேட்டுட்டேன். அது தவறு என்பதை இந்த பைஜாமா பெரியவர் மூலம் தெரிந்து கொண்டேன். ஆத்மார்த்தமான அர்ப்பணம் தான் முக்கியம் என்று புரிந்து கொண்டேன் என்று சொல்லி அந்த அர்ச்சகரின் கைகளை கண்களில் ஒற்றிக் கொண்டேன்.அர்ச்சகர் ஹனுமனை பார்த்து கை கூப்பினார் .நான் திரும்பி பார்த்தேன் அந்த பைஜாமா பெரியவர் எங்கோ வெறித்து பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார். நான் அர்ச்சகரிடம் கேட்டேன். அவர் யார் உங்களுக்கு தெரியுமா என்றேன்.

தெரியும் வடக்கிலிருந்து வந்துள்ள சாது அவர். நம் குருநாதரிடம் மிகுந்த ஈடுபாடு உண்டு. அடிக்கடி தபோவனம் வருவார். யோகிராம்சுரத்குமார் ஸ்வாமிகள் என்பது அவர் பெயர். எப்போதுமே அவர் கையில ஒரு விசிறி இருந்து கொண்டிருப்பதால் அவரை விசிறி சுவாமி என்றும் கூப்பிடுவர்.நான் மீண்டும் திரும்பிப் பார்த்தேன் மெதுவாக விசிறியபடியே நடந்து கொண்டு இருந்தார் விசிறி ஸ்வாமி. குருநாதர் இங்கு தங்கிப் போகச் சொன்னதன் காரணம் மிகத் தெளிவாக புரிந்தது.

தொகுப்பு: ரமணி அண்ணா

 

The post சஞ்சலத்தை போக்கும் தபோவனம் appeared first on Dinakaran.

Related Stories: