வாஸ்து நாள் என்றால் என்ன?

வாஸ்து நாள் என்றால் என்ன?
அந்த நாளில்தான் வீடு கட்டத் துவங்க வேண்டுமா?
– சுந்தரவடிவேல், திருவண்ணாமலை.

வாஸ்து புருஷன் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் தினத்தை வாஸ்து நாள் என்று அழைக்கிறார்கள். முதலில் இந்த வாஸ்து புருஷன் என்பவன் யார் என்பதைத் தெரிந்துகொள்வோம். சிவபுராணத்தின்படி, சிவபெருமான் அந்தகாசுரனை சம்ஹாரம் செய்யும் காலத்தே அவருடைய வியர்வைத் துளியில் இருந்து உருவான குட்டி பூதமே இந்த வாஸ்து புருஷன் என்று சொல்வார்கள். இந்த குட்டி பூதமானது சதா பூமிக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் என்றும் வருடத்திற்கு எட்டு நாட்கள் மட்டும் உறக்கத்தில் இருந்து எழுவார் என்றும் கணக்கிட்டு வைத்துள்ளார்கள். சித்திரை 10, வைகாசி 21, ஆடி 11, ஆவணி 6, ஐப்பசி 11, கார்த்திகை 8, தை 12, மாசி 22 என இந்த எட்டு நாட்களில் வாஸ்து புருஷன் நித்திரையிலிருந்து எழுவார் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பர்.

இந்த நாட்கள் எந்த வருடத்திலும் மாறவே மாறாது. இந்த எட்டு நாட்களில்கூட குறிப்பிட்ட நேரத்தில்தான் கண்விழிப்பார் என்றும் அதுவும் மூன்றேமுக்கால் நாழிகை, அதாவது ஒன்றரை மணிநேரம் மட்டுமே கண் விழித்திருப்பார் என்றும் சொல்வார்கள். இந்த ஒன்றரை மணி நேரத்தையும் தந்தாபனம், ஸ்நானம், பூஜை, போஜனம், தாம்பூலம், சயனம் என்று 15 நிமிடங்கள் வீதம் ஆறு பாகங்களாகப் பிரித்திருப்பர். பொதுவாக வீடு கட்டுவதற்கு முதல் முக்கால் மணி நேரம் கழித்து, அடுத்து வரும் போஜனம், தாம்பூலம் என்று வருகின்ற குறிப்பிட்ட அரை மணிநேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த அரை மணி நேரத்திற்குள் பூமிபூஜை செய்து வீடு கட்டத் துவங்கினால் எந்தவிதத் தடையுமின்றி வீடு கட்டி முடிக்கப்படுவதோடு, அந்த வீட்டில் எல்லா விதமான வளங்களும் நிறைந்திருக்கும் என்பது நமது நம்பிக்கை.

?தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடுவது, சந்நதியை பிரதட்சிணம் செய்து வழிபடுவது இந்த இரண்டில் எது சரி?
– ஆர். பாலாஜி, காட்பாடி.

தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடுவதற்கு ஆத்மபிரதக்ஷிணம் என்று பெயர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைசக்தி என்பது உண்டு. ஆத்மாவை ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா என மூன்றாகப் பிரிப்பார்கள். நமக்குள் உய்யும் இறைசக்திக்கு பரமாத்மா என்று பெயர். நமக்குள் இருக்கும் பரமாத்மாவை எண்ணி வழிபடுவதுதான் ஆத்மபிரதக்ஷிணம் என்றழைக்கப்படும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடும் முறை. வீட்டில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வழிபடலாம். ஆலயம் என்று வரும்போது அங்கே அமர்ந்து அருள்பாலிக்கின்ற இறைவனைத்தான் வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் எத்தனை பெரிய மனிதரைக் கண்டாலும் சரி, அவர் சாமியாராக இருந்தாலும், சந்யாசியாக இருந்தாலும் ஆலய வளாகத்திற்குள் அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கக் கூடாது. ஆலய வளாகத்திற்குள் இறைவன் ஒருவனை மட்டுமே விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். பெரிய மனிதர்களுக்கு கைகூப்பி வேண்டுமானால் நமது பணிவினைத் தெரிவிக்கலாம். ஆக கோயிலுக்குள் தன்னைத்தானே சுற்றி வழிபடுதல் கூடாது. சந்நதியை சுற்றி வந்து தான் வழிபட வேண்டும். நாம் வாழுகின்ற பூமியையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தனக்குள் இருக்கும் இறைசக்தியை உணர்ந்துகொண்டு பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டாலும், தான் இயங்குவதற்குக் காரணமாய் இருக்கும் ஆதார சக்தியான சூரியனையும் சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த நியதியைத்தான் நாமும் பின்பற்றுகிறோம்.

?இறந்தவர்களை வணங்குவதால் என்ன பலன்?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

இருப்பவர்களை வணங்குவதைவிட இறந்தவர்களை வணங்குவது என்பது சாலச் சிறந்தது. இருப்பவர்களை என்றால் காசு, பணம் வைத்திருப்பவர்களை என்று பொருள் கொள்ளுங்கள். இருப்பவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன் நிலையற்றது. இறந்தவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன் நிலையானது. முன்னோர் வழிபாட்டின் மூலமே ஒவ்வொரு குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி என்பது நடக்கும். வம்சவிருத்தி என்பது இறந்தவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன்களில் பிரதானமானது. இந்த முன்னோர் வழிபாடு சரியாக நடக்காத குடும்பங்கள் ராஜவம்சம் ஆயினும் காணாமல் போய்விடும் என்பது கண்கூடு. மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாள் இந்து மதத்தவரின் இல்லங்களில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமும் இதுவே.

?பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?
– மீனாவாசன், சென்னாவரம்.

பாரம்பரிய ஜோதிட முறைகளில் இதுவும் ஒன்று. இது, ஐந்து வகையான பட்சிகள், ஐந்து வகையான தொழில்கள், ஐந்து வகையான ஜாமங்கள் என்று பிரித்துப் பலன் கூறும் முறை ஆகும். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்று இந்த ஐந்து பறவைகளுக்கும் 27 நட்சத்திரங்களை பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பறவையும் அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று ஐந்து வகையான தொழில்களில் ஈடுபடும். அதேபோல ஒரு நாளைக்குப் பகலில் ஐந்து ஜாமங்கள், இரவில் ஐந்து ஜாமங்கள் என்று கால அளவினை பிரித்திருக்கிறார்கள். ஒரு ஜாமம் என்பது இரண்டு மணி நேரம் இருபத்திநான்கு நிமிடங்கள் ஆகும். இவ்வாறு ஒவ்வொரு பட்சிக்கும் ஒரு ஜாமத்திற்கு ஒரு தொழில் என்று கணக்கு வைத்துக் கொள்கிறார்கள். இவற்றில் அரசு, ஊண் இரண்டும் உத்தம பலனையும், நடை மத்திம பலனையும், துயில், சாவு ஆகியன அதம பலனையும் குறிப்பதாகச் சொல்வர். இந்தத் தொழில்கள் வளர்பிறை நாட்களில் ஒருவிதமாகவும், தேய்பிறை நாட்களில் வேறுவிதமாகவும் காணப்படும். பஞ்சாங்கத்தில் இந்த அட்டவணையைத் தெளிவாகக் கொடுத்திருப்பார்கள். முக்கியமான பணியைத் துவக்கும்போது இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தினை கணக்கில் கொள்வது பாரம்பரிய ஜோதிடர்களின் வழக்கமாக உள்ளது.

?கோயில் அல்லது வீட்டில் உள்ள பிள்ளையார் முன்பு பெண்கள் தோப்புக்கரணம் போடலாமா?
– வெங்கட்ராமன், செகந்திராபாத்.

இரு கரங்களால் தலையில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போட்டு வணங்குவதும் பிள்ளையாருக்கு உரிய வழிபாட்டு முறையாகப் பெரியவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த முறைக்கு ஆண், பெண் பேதம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கோயில் அல்லது வீட்டில் உள்ள பிள்ளையார் முன்பு பெண்கள் தாராளமாக தோப்புக்கரணம் போட்டு வணங்கலாம். இதில் தவறேதும் இல்லை.

The post வாஸ்து நாள் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: