அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது; கமலா ஹாரிசுடன் 2வது விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் : தோல்வி பயத்தில் பின்வாங்குகிறாரா டொனால்ட் டிரம்ப்


வாஷிங்டன்: கமலா ஹாரிசுடன் நேரடி விவாதத்தில் 2வது முறையாக பங்கேற்க மாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தோல்வி பயத்தில் டொனால்ட் டிரம்ப் பின்வாங்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட ஆர்வமாக இருந்தார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்தி கொள்வது வழக்கம். அந்த வகையில் ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் இடையே விவாதம் நடந்தது. இதில் ஜோ பைடன் சொதப்பியதால் அதிபர் போட்டியில் இருந்து விலகினார்.

இதையடுத்து தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையே நேரடி விவாதம் கடந்த 10ம் தேதி நடந்தது. இதை ஏபிசி செய்தி நிறுவனம் நடத்தியது. இதில் சட்ட விரோத குடியேற்றம், கருக்கலைப்பு, அமெரிக்க பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு விவகாரங்கள் குறித்தும் காரசாரமாக விவாதித்தனர். ஜோ பைடன், கமலா ஹாரிசின் ஆட்சியை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அதேபோல் கடந்த 4 ஆண்டு ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தம், எதிர்க்கால திட்டம் மற்றும் டிரம்பின் செயல்பாடு உள்ளிட்டவற்றை கமலா ஹாரிஸ் விளாசினார்.

இப்படியாக விவாதம் முடிவடைந்தது. இதையடுத்து உடனடியாக 2வது விவாதத்துக்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்தார். இதற்கு டொனால்ட் டிரம்ப் தரப்பில் பதில் வரவில்லை. இந்நிலையில்தான் கமலா ஹாரிஷ் வென்றதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்துள்ளார். இத்தகைய சூழலில்தான் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ‘இனி கமலா ஹாரிசுடன் விவாதத்தில் 2வது முறையாக பங்கேற்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரூத் எனும் சமூக வலைதள பக்கத்தில், ‘ஒரு போட்டியாளர் போட்டியில் இருந்து தோல்வியடைந்தார் என்றால் அவர் கூறும் முதல் வார்த்தை மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதுதான்.

கருத்து கணிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் கமலா ஹாரிசுக்கு எதிரான இந்த விவாதத்தில் வென்றது நான்தான் என்பது தெரியும்’ என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். இதற்கிடையேதான் வடகரோலினாவில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் கூறுகையில், “டிரம்புடன் இன்னொரு விவாதத்தை நடத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். அதற்கு அவரும் ஒப்புக்கொள்வார் என நினைக்கிறேன்”என நம்பிக்கை தெரிவித்தார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது; கமலா ஹாரிசுடன் 2வது விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் : தோல்வி பயத்தில் பின்வாங்குகிறாரா டொனால்ட் டிரம்ப் appeared first on Dinakaran.

Related Stories: