சீனாவில் இலையுதிர்க் காலத் திருவிழா: நிலவைப் பார்த்தபடி ‘மூன் கேக்’ சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சி

சீனா: இலையுதிர்க் காலத் திருவிழாவை ஒட்டி ஒட்டுமொத்த சீன நாடே விளக்குகளால் ஒளிர்ந்தது. புத்தாண்டுக்கு நிகராக சீனர்கள் கொண்டாடும் விழா இலையுதிர்க் காலத் திருவிழா சீன நாட்காட்டியின் 8வது மாதத்தின் 15வது நாளில் இலையுதிர்க் காலத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சுற்றத்தாருடன் சேர்ந்து நிலவை பார்த்து மூன் கேக் சாப்பிடுவது முக்கிய நிகழ்வாகும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவை சீனர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

சீனாவில் உள்ள யூ பூங்கா பழமையுடன் புதுமை கலந்து மின்னுகிறது. ராட்சத அளவிலான நவீன விளக்குகள் பூங்காவை அலங்கரிக்கின்றன. அதே போல ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளிலும் குடும்பத்தினருடன் இணைந்து விளக்குகளை மிதக்கவிட்டு மகிழ்கின்றனர். ஒரு பக்கம் ஆடல், பாடலுடன் இசை நிகழ்ச்சிகளும் களைகட்டுகிறது. முன் ஒரு காலத்தில் சீனாவில் ஹோயி சேன்ஜ் என்ற காதல் தம்பதி வாழ்ந்தனர்.

சிறந்த வில்லாளரான ஹோயி மக்களை வதைத்த ஒன்பது சூரியன்களை வில்லால் வீழ்த்தியதற்காக அமிர்தத்தை பரிசாக பெற்றாராம். இருவரும் இணைபிரியாமல் இருக்க எண்ணி ஒருவர் மட்டுமே பருகும் அளவும் இருந்த அமிர்தத்தை வீட்டிலேயே வைத்துள்ளனர். ஆனால் ஹோயியின் மாணவர் ஒருவர் இதை திருட வர மனைவி அமிர்தத்தை பருகி நிலவுக்கு சென்று விட்டாராம்.

நிலவை பார்த்தபடி ஒவ்வொரு நாளும் மனைவியை நினைத்து மூன் கேக்குகள் செய்தாராம் ஹோயி இப்புராண கதையை நினைவூட்டியே இவ்விழா கொண்டாடபடுகிறது. இதை நினைவூட்டும் விதமாக சாங்கிங் நகரில் உள்ள ஏரியில் 300 மீட்டர் அளவுக்கு விளக்குகளை ஒளிரவைத்து அதன் நடுவே நிலவு போன்ற விளக்கை வைத்துள்ளனர். சொந்தங்களுடன் நிலவை பார்த்தபடி மூன் கேக்குகள் சாப்பிட்டு மக்கள் மகிழ்கின்றனர். இலையுதிர்கால திருவிழாவை நேரில் கண்டு களிப்பதற்காக சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர்.

The post சீனாவில் இலையுதிர்க் காலத் திருவிழா: நிலவைப் பார்த்தபடி ‘மூன் கேக்’ சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: