வட்டாட்சியர் அலுவலகம் அருகே ₹2 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: ஆக்கிரமிப்பு கட்டிடமும் இடிப்பு

திருவள்ளுர், செப். 13: திருவள்ளூரில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை இடித்து ₹2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய்த்துறையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்து இருந்தனர்.

இதில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் அதிமுக நிர்வாகிக்கு இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு வாடகை விட்டிருந்தனர். ₹48 கோடி மதிப்பிலான 44 சென்ட் நிலத்தை கடந்த ஜனவரி மாதம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் தலைமையில் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் மீட்டனர். மேலும் அதே பகுதியில் ₹2 கோடி மதிப்பிலான 6 சென்ட் நிலத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் ஓய்வூதியர் சங்க கட்டிடம் கட்டி அதில் ஜெராக்ஸ் கடை உள்ளிட்டகைகளுக்கு 30 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த ஆக்கிரமிப்பு கட்டடத்தை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார் மேற்பார்வையில் திருவள்ளூர் வட்டாட்சியர் செ.வாசுதேவன், நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி ₹2 கோடி மதிப்பிலான 6 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post வட்டாட்சியர் அலுவலகம் அருகே ₹2 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: ஆக்கிரமிப்பு கட்டிடமும் இடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: