சென்னை: மகளிர் கேலோ இந்தியா பிரிமியர் லீக் ஜூடோ போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு ஜூடோ சங்கம், ஒன்றிய, மாநில மற்றும் விளையாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தும் 4வது தென் மண்டல மகளிர் கேலோ இந்தியா ஜூடோ பிரிமியர் லீக் தொடர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து சுமார் 800 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் நாளான நேற்று 12-15 வயது வரையிலான சப் ஜூனியர் பிரிவு போட்டிகள் எடை அடிப்படையில் 9 வகையாக நடந்தன. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட 144 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்றும் நாளையும் கேடட் ஜூனியர், சீனியர் பிரிவு போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் இம்மாதம் 23ம் தேதி தொடங்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக ஜூடோ லீக் போட்டியை வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜூடோ சங்கத் தலைவர் விஜய் மோகன் முரளி, செயலர் நா. முரளி, நவீன், ஜூடோ பயிற்சியாளர் டோனி லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஜூடோ லீக் தொடர் சென்னையில் தொடக்கம் appeared first on Dinakaran.