ஈரோடு : பூண்டு சீசன் இல்லாததால் ஈரோட்டில் பூண்டு விலை தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மக்கள் கவலையடைந்து வருகின்றனர்.
ஈரோடு கொங்கலம்மன் கோயில் வீதியில் மொத்த மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 100க்கும் மேற்பட்டவை உள்ளன.
இதனால், கிராமப்புற மளிகை கடைக்காரர்களும், பொதுமக்களும் மொத்த விலையில் வீடுகளுக்கு தேவையான மளிகை பொருட்களை மொத்த விலையில் வாங்கி செல்வர். இதில், சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் பூண்டின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் பூண்டு வாங்கவே தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு மார்க்கெட்டில் சில்லரை விலையில் நேற்று நாட்டு பூண்டு மற்றும் மலை பூண்டு ஒரு கிலோ ரூ.380 முதல் ரூ.420 வரையும் விற்பனையானது. இதனால் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் அரை கிலோ, கால் கிலோ என்ற கணக்கில் பூண்டினை வாங்கி சென்றனர். இது குறித்து பூண்டு மண்டி உரிமையாளர் கார்த்தி கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு நாட்டு பூண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்தும், மலைப்பூண்டு இமாச்சல பிரதேசத்தில் இருந்தும் வரத்தாகும். நடப்பாண்டில் புதிய பூண்டு போதிய மகசூல் இல்லாமலும், தரம் குறைவாகவும் வரத்தானதால் இருப்பு வைக்க முடியவில்லை.
இதனால், இந்த ஆண்டு பூண்டு இருப்பு வைக்க முடியவில்லை. பூண்டு சீசன் இல்லாததால் தற்போது உலர்ந்த பழைய பூண்டுகளை விற்பனைக்கு வருகிறது. அதுவும் குறைந்தளவே இருப்பு உள்ளதால் அதனால் விலை உயர்ந்து கொண்டே போகிறது. மொத்த விலையில், நாங்கள் நாட்டு பூண்டு ஒரு கிலோ ரூ.220 முதல் ரூ.340 வரையும், மலை பூண்டு ரூ.260 முதல் ரூ.360 வரை விற்பனை செய்கிறோம். எங்களிடம் மொத்த விலையில் வாங்கி செல்லும் வியாபாரிகள், டேமேஜ் பூண்டு போன்றவற்றை கழித்து சுத்தம் செய்து ஒரு கிலோ ரூ.400 வரை சைஸ் வாரியாக விற்பனை செய்கின்றனர்.
நீலகிரி மற்றும் ஊட்டி பகுதியில் இருந்து விதைப்பூண்டு ரூ.200 முதல் ரூ.650 வரை விற்பனையாகிறது. தற்போதுதான் ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநில வியாபாரிகள் வாங்கி செல்ல துவங்கி உள்ளனர். இவர்கள் இங்கிருந்து விதைப்பூண்டினை வாங்கி நடவு செய்து, அந்த புது பூண்டு வருகிற தமிழ் மாதம் தை மாதத்தில்தான் வரத்தாகும்.
அதாவது ஜனவரி மாதத்திற்கு பிறகு பூண்டின் விலை குறைய துவங்கும். புது பூண்டு வரத்தாகும் வரை பூண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து, பூண்டின் விலை புதிய உச்சத்தை தொடும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஈரோட்டில் பூண்டு விலை தொடர்ந்து உச்சம் appeared first on Dinakaran.