வந்தவாசி, செப். 11: வந்தவாசி இந்து முன்னணி சார்பில் சன்னதி தெரு, கே.ஆர்.கே. உடையார் தெரு, கேசவா நகர், இரட்டை வாடை செட்டி தெரு, சன்னதிபுது தெரு, கோணத் தெரு, காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 35 சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்து வந்தனர். இதன் விஜர்சன ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது. அங்காளம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தினை திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி அறக்கட்டளை தலைவர் பாலாமணி அருணாச்சலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலதாளத்துடன் தொடங்கிய ஊர்வலம் தேரடி, பஜார் வீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை மூலை, தாலுகா அலுவலகம் சாலை, அச்சரப்பாக்கம் சாலை வழியாக பூமா செட்டி குளத்தை அடைந்தது. அப்போது குளத்தில் பாதுகாப்பான் முறையில் தோண்டப்பட்ட சிறப்பு குளத்தில் பலத்த போலீஸ் பாதுகப்புடன் ஒவ்வொரு விநாயகராக கரைக்கப்பட்டது.
முன்னதாக விநாயகர் விஜர்சன ஊர்வலத்தின் போது பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னனி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.சீனுவாசன் தலைமை தாங்கினார். விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் கோ.ராமநாதன், பாஜக நகர தலைவர் சுரேஷ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரை, நவநீதி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மச்சேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்து முன்னனி புதுச்சேரி மாநில தலைவர் சனில் குமார், மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயில் சக்தி உபாசகர் ஆ.லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகர பொது செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார். செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா மேற்பார்வையில் திருவண்ணாலை எஸ்பி பிரபாகரன், வேலூர் எஸ்பி மதிவாணன் ஆகியோர் தலைமையில் ஏடி எஸ்பிகள் பழனி, பாண்டியன், டிஎஸ்பிகள் வந்தவாசி கங்காதரன், ஆரணி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post விநாயகர் விஜர்சன ஊர்வலம் 2 எஸ்பிகள் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு வந்தவாசியில் appeared first on Dinakaran.