அமைதியை ஏற்படுத்த கோரி மணிப்பூரில் தீப்பந்தங்களுடன் பேரணியாக சென்ற பெண்கள்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்


இம்பால்: மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கோரி பெண்கள் தீப்பந்தங்களுடன் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மணிப்பூரில் மெய்தீஸ் மற்றும் குக்கி இன மக்களிடையே வெடித்த மோதல், 16 மாதங்களை கடந்தும் ெதாடர்கிறது. இருதரப்பு மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதாக ஆளும் பாஜக அரசு தெரிவித்தாலும், இருதரப்பு மோதல்களால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டே உள்ளது. உருட்டை கட்டைகள், துப்பாக்கிகளை கொண்டு தாக்கிக் கொண்ட நிலையில், தற்போது ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதோடு, பொதுமக்களிடையே அச்சமும் நிலவுகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் மோதலைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டித்தும், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி சென்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் சேர்ந்து ஒன்று கூடி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் ராஜ் பவன் மற்றும் முதல்வர் இல்லம் போன்ற முக்கியமான பகுதிகளைத் தவிர்த்தனர். மணிப்பூரின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தும், அமைதியை மீட்டெடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கிடையே அசாம் ரைபிள்ஸ் என்ற பாதுகாப்படை பிரிவினர் மணிப்பூரில் ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post அமைதியை ஏற்படுத்த கோரி மணிப்பூரில் தீப்பந்தங்களுடன் பேரணியாக சென்ற பெண்கள்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் appeared first on Dinakaran.

Related Stories: