மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 17ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இறைத்தூதரான நபிகள் நாயகம் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்ததோடு, மறை நூலான திருக்குர்ஆனை உலகுக்கு அறிவித்தவர். இவரது பிறந்தநாள், மிலாடி நபியாக கொண்டாடப்படுகிறது. கி.பி. 570-ம் ஆண்டு ரபி உல் அவ்வல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12-ம் நாளில் மக்கா நகரில் நபிகள் நாயகம் அவதரித்த நாளையே மிலாடி நபியாக இஸ்லாமிய மதத்தினர் கொண்டாடுகின்றனர்.

மிலாடி நபி அன்று புனித நூலான குர்ஆனை வாசிப்பது இஸ்லாமியர்களிடம் கடமையாக பார்க்கப்படுகிறது. இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஆண்டு செப்.16-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செப்.4ம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்ங்களில் தெரியாததால், செப்.16க்கு பதில், மறுநாள் செப்.17-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சில தினங்கள் முன் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஏற்று, தமிழக அரசு தற்போது செப்.17ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிக்கையில், “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதில், செப்.17-ம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

The post மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: