தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 2,327 இடங்களுக்கு 7.94 லட்சம் பேர் போட்டி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் 14 தேதி நடக்கிறது. 2,327 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 “ஏ” பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் 13 இடம் உள்பட 507 இடங்களும், குரூப் 2ஏ பணியில் வணிக வரிகள் 27 இடம் உள்பட 1820 பணியிடங்களும் இடம் பெற்றுள்ளன.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 7,93,947 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல்நிலை எழுத்து வருகிற 14ம் தேதி நடக்கிறது. முதல்நிலை தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இத்தேர்வு மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 2,763 இடங்களில் நடக்கிறது. இந்நிலையில் தேர்வு எழுதுவோர் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தகவல் வெளியிட்டுள்ளது.

முதல்நிலை தேர்வு கொள்குறி வகை அடிப்படையில் நடைபெறும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்கள் காலை 8.30 மணிக்கு வர வேண்டும். சலுகை நேரம் காலை 9 மணி வரை. தேர்வு சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கும். அனைத்து தேர்வர்களும் சரியான நேரத்திற்கு முன்பே தேர்வுக் கூடத்திற்குள் இருக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.

அத்துடன் தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும். மின்னணு சாதனங்களான செல்போன் மற்றும் புத்தகங்கள் குறிப்பேடுகள், கைப்பை மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் அறிவுரைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினால் தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

The post தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 2,327 இடங்களுக்கு 7.94 லட்சம் பேர் போட்டி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: