சென்னை: பூந்தமல்லி அருகே தனியார் பள்ளி ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதையும் சீல் வைக்கப்பட்டது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் பகுதியில் தனியார் சர்வதேச உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு இந்த பள்ளி செயல்படாமல் மூடப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளி இயங்கி வந்த இடம் 5 ஏக்கர் அரசு நிலத்தை கடந்த 1993ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தது.
இதையடுத்து விதிமுறைகளை மீறி அதனை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கர் இடம் என மொத்தம் 25 ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு செய்து செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பள்ளியின் நிலம் குத்தகை காலம் 2013ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் குத்தகை பாக்கி தொகையான ரூ.23 கோடியை பள்ளி நிர்வாகம் செலுத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அரசு நிலத்தையும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நசரத்பேட்டை போலீசார் தனியார் பள்ளி செயல்பட்டு வந்த இடத்திற்கு சென்றனர். தனியார் பள்ளியின் ஒவ்வொரு அறைகளையும் பூட்டி வைக்கப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்து அதில் இருக்கும் ஆவணங்களை எடுத்து வைத்துவிட்டு வீடியோ பதிவு செய்து பள்ளி வளாகம் முழுவதையும் சீல் வைத்தனர். இதில், மீட்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மீட்கப்பட்டுள்ள இடத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை அல்லது மாதிரி பள்ளி அமைக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம் appeared first on Dinakaran.