தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

தாம்பரம்: தூய்மை சேவைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை சுகாதாரம், இயற்கை தூய்மை என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு கலந்துகொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி வளாகத்தில் இருந்து வேளச்சேரி பிரதான சாலை வரை என சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கலந்துகொண்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, தாம்பரம் மாநகராட்சி, கிழக்கு தாம்பரம் 47வது வார்டுக்கு உட்பட்ட பாரதமாதா தெருவில் தூய்மை சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நட்டு வைத்து, அப்பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டார்.

தூய்மை சேவைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “என் நகரத்தை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பேன்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையெழுத்துப் பலகையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர்கள் வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணாதுரை, எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா கார்த்திக், ஜோதி குமார், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: