முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்): இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் வழக்கை விசாரித்த கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம், 12 மீனவர்களுக்கு ரூ.5 கோடியே 40 லட்சம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது. மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்கள் மீதான வழக்கில், இந்திய தூதரகம் தலையிட்டுள்ளதால், அதன் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பேரதிர்ச்சி தருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை. இப்போது இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பது பெரும் கவலையளிக்கிறது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும்.
அன்புமணி (பாமக தலைவர்): தமிழக மீனவர்களை ஒடுக்கும் வகையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
The post இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம் வழக்கில் இருந்து மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.