சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்

செங்கல்பட்டு: சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் 3 புதிய சுங்கச்சாவடிகளைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு சுங்கச் சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பு கூட தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளன.

உதாரணமாக செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச் சாவடி 2019 ஆம் ஆண்டில் காலாவதி ஆன நிலையில் இன்னும் கட்டண வசூலைத் தொடர்கிறது. இது போன்று இன்னும் பல்வேறு சுங்கச் சாவடிகள் காலாவதியான நிலையிலும் கட்டணக் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் தினம்தோறும் ரூபாய் 50 கோடி சுங்க கட்டணமாக வசூல் கொள்ளை நடக்கிறது. அதாவது ஆண்டிற்கு 18 ஆயிரம் கோடி தமிழக மக்களுடைய பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜவாஹிருல்லா தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஆர்ப்பாட்டம் காரணமாக பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பி வருகின்றனர். ஆகவே காலாவதியான செங்கல்பட்டு பரணூர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உடனடியாக மூடப்பட வேண்டும். கேரளாவின் அளவுகோலைப் பயன்படுத்தி 9 சுங்கச் சாவடிகளைத் தவிர மற்ற அனைத்துச் சாவடிகளும் மூடப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முற்றுகை போராட்டம் காரணமாக கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.

The post சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: