ரேடியோ அலைகள் எதுவும் செய்யாது; செல்போன் பயன்பாட்டால் மூளை புற்றுநோய் வராது: நீண்டகால சந்தேகத்திற்கு நிம்மதியான தகவல்

மெல்போர்ன்: செல்போன்கள் வரத்தொடங்கிய காலத்தில் இருந்தே ஒரே ஒரு விஷயம் மனித இனத்தை அச்சுறுத்தி வந்தது. மூளைக்கு மிக நெருக்கமாக வைத்து செல்போனை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுகள் மூளையை தாக்கி மூளை புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக தொடர்ச்சியாக நம்பப்பட்டு வந்தது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமான ஐஏஆர்சி (புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்) ஆய்வு நடத்தி கடந்த 2011ல் முடிவை வெளியிட்டது. அதில், ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சு வெளிப்பாடு மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக வகைப்படுத்தியது. இது மேலும் கவலையை அதிகரித்தது.

அதாவது இந்த கதிர்வீச்சுகளால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற முடிவுக்கு வர ஓரளவுக்கு ஆதாரங்கள் இருந்ததால் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டதாக ஐஏஆர்சி கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இதனால் இந்த அறிக்கை மேலும் பீதியை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 1994ம் ஆண்டு முதல் 2022 வரை வெளியான அத்தனை ஆய்வு முடிவுகளையும் அலசி ஆராயவும் அடுத்தகட்ட ஆய்வை ஐஏஆர்சி தொடங்கியது. மொத்தம் 5000 ஆய்வில் இருந்து தரமான 63 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் முடிவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தற்போது என்விரான்மென்ட் இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொபைல் போன் பயன்பாட்டிற்கும், மூளை புற்றுநோய் மற்றும் வேறு எந்த தலை, கழுத்து புற்றுநோய்க்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் மொபைல் போனைப் பயன்படுத்தினாலும், எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும், அதனால் புற்றுநோயுடன் எந்த சம்மந்தமும் இல்லை. செல்போன், வயர்லெஸ் உபகரணங்களில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுகளால் எந்தவொரு சுகாதார பாதிப்புக்கும் ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், வெவ்வேறு அதிர்வெண்களில் வெவ்வேறு வழிகளில் ரேடியோ அலைகளின் பயன்பாடு இருக்கிறது. எனவே, ரேடியோ அலை வெளிப்பாடு பாதுகாப்பாக இருப்பதை தொடர்ந்து உறுதி செய்வது அவசியம் என ஐஏஆர்சி கூறி உள்ளது.

The post ரேடியோ அலைகள் எதுவும் செய்யாது; செல்போன் பயன்பாட்டால் மூளை புற்றுநோய் வராது: நீண்டகால சந்தேகத்திற்கு நிம்மதியான தகவல் appeared first on Dinakaran.

Related Stories: