மோடி திறந்தது, 8 மாதத்தில் இடிந்தது; சிவாஜி சிலை கட்டுமானத்தில் மிகப்பெரிய ஊழல்: ரூ.1 கோடி செலவு செய்து விட்டு ரூ.236 கோடி என கணக்கு காட்டியதாக காங். குற்றச்சாட்டு

புனே: அண்மையில் இடிந்து விழுந்த சத்ரபதி சிவாஜி சிலை கட்டுமான பணிக்காக ரூ.236 கோடி எடுக்கப்பட்ட போதிலும், ரூ.1 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி 8 மாதங்களுக்கு முன் திறந்துவைத்தார். இந்த சிலை கடந்த மாதம் 26ம் தேதி இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனிடையே, சிலை செய்வதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ரூ.1 கோடி செலவு செய்து விட்டு ரூ.236 கோடி கணக்கு காட்டியிருக்கின்றனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புனேவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே, ‘சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்காட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலை கட்டுவதற்கு அரசு கருவூலத்தில் இருந்து ரூ.236 கோடி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிலையின் கட்டுமான பணிக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சிவாஜி சிலை இடிந்து விழுந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவதாக முதல்வர் ஷிண்டே கூறுகிறார்.

சிவாஜி மகாராஜா அவமதிக்கப்பட்ட சம்பவத்திலும், பத்லாபூர் பள்ளியில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திலும் எங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இதனை அரசியல் என்று கூற முடியாது. ஒவ்வொரு நாளும் கொலை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கிறது. இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் அரசு, மோசடிகளை செய்வதிலும் பணம் வசூல் செய்வதற்கான வழிகளை தேடுவதிலுமே கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மோடி திறந்தது, 8 மாதத்தில் இடிந்தது; சிவாஜி சிலை கட்டுமானத்தில் மிகப்பெரிய ஊழல்: ரூ.1 கோடி செலவு செய்து விட்டு ரூ.236 கோடி என கணக்கு காட்டியதாக காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: