வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை ரூ.5,180 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் இன்று (03.09.2024) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 31வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 – 2022, 2022 – 2023 மற்றும் 2023 – 2024 ஆம் நிதியாண்டுகளில் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் நிறைவு பெற்ற பணிகளை தவிர இதர பணிகளின் முன்னேற்றம் குறித்தும், 2024-2025 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், அனைத்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான திருக்கோயில்களை புனரமைக்கும் திருப்பணிகள், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் (Master Plan) கீழ், திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பணிகள், ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டிற்கு மேல் நடைபெற்று வரும் திருப்பணிகள், புதிதாக உருவாக்கப்பட்டு வரும் தங்கத்தேர், வெள்ளித் தேர், மரத்தேர்கள் மற்றும் தேர் மராமத்து பணிகளின் தற்போதைய நிலை, திருக்குளங்களை புனரமைக்கும் பணிகள், மலைக்கோயில்களில் செயல்படுத்தப்படும் ரோப் கார் திட்டம், மற்றும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை கட்டுமானப் பணிகள், ஒருகால பூஜைத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய திருக்கோயில்கள், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள், இராஜகோபுரம், அன்னதானக் கூடங்கள், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகளின் பணி முன்னேற்றம் போன்ற பொருண்மைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உள்துறைக்கு பணியமர்த்தம் செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்து மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் 31 வது சீராய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அரசு பொறுப்பேற்றபின் இதுவரை 2,005 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இதன் எண்ணிக்கையை 2,500 க்கு மேல் உயர்த்துவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ரூ.6,703 கோடி மதிப்புள்ள 6,853.14 ஏக்கர் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, 1,72,302 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.5,372.72 கோடி மதிப்பீட்டில் 20,252 பணிகள் நடைபெற்று வந்தன. இவற்றில் அரசு நிதி மற்றும் திருக்கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளில் 4,309 பணிகளும், உபயதாரர் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளில் 4,422 பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக உபயதாரர்கள் மட்டும் ரூ.1,059.58 கோடி மதிப்பிலான 8,819 பணிகளை செய்து வருகின்றனர். இது இந்த அரசின் மீதும் துறையின் மீதும் உபயதாரர்கள் வைத்துள்ள நன்மதிப்பையும், அவர்களின் எண்ணம் முழுமையாக ஈடேறுகிறது என்ற நம்பிக்கையை காட்டுகிறது. 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான திருக்கோயில்களை புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.300 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார். இந்நிதியை கொண்டும், உபயதாரர் நிதியின் மூலமாகவும் இதுவரை 274 திருக்கோயில்களில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், திருத்தேர்களை சீரமைத்தல், புதிய தங்க மற்றும் வெள்ளித் தேர்களை உருவாக்குதல், திருக்குளத் திருப்பணி, புதிய திருமண மண்டபங்கள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் என அனைத்து வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காலக் கட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு தேர்தல் பணி இல்லாததால் ஏற்கனவே நடைபெற்று வந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட செயல் அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என 381 நபர்களுக்கும், அமைச்சு பணியில் 172 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. திருக்கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். இத்துறையில் பதவி உயர்வு வழங்கப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த 713 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 38 செயல் அலுவலர்களுக்கு உதவி ஆணையர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் பயன்படுத்த இயலாத பொன் இனங்களை பிரித்தெடுத்து ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் திருக்கோயில்களுக்கு இதுவரை ரூ.6 கோடி வட்டித்தொகையாக கிடைக்கப்பெறுகிறது. குணசீலம், பழனி திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஒன்றிய அரசின் உருக்காலைக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் இத்திட்டத்தின் மூலம் சுமார் 25 கோடி ரூபாய் அளவிற்கு வட்டித்தொகை கிடைக்கபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகவே நாங்கள் கிறிஸ்துமஸ், ரம்ஜான், மகாவீர் ஜெயந்தி, ஹோலி பண்டிகை என அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றோம். இந்த ஆட்சி சாதி, மத, இன, மொழி உணர்வுகளை கடந்து அனைத்து மதத்தினரும் வழிபடுகின்ற உரிமையை பெற்று தருகின்ற ஆட்சியாக திகழ்ந்து வருகிறது. ஆன்மிக அன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் புதிய திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தும். முதலமைச்சர் அவர்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை ரூ.5,180 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகின்றார். இத்திட்டத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கி வருகின்றார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ரூ.1,164 கோடியை தனது பங்களிப்பாக இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளது. வடசென்னை வாடா சென்னையாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள இந்த அரசு முழு வீச்சில் தயாராக உள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்றபோது இருந்த நிலை ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருவதை அனைவரும் அறிவீர்கள். முதலமைச்சர் அவர்கள் ஓய்வுபெற்ற ஆட்சிப்பணி அலுவலர் திரு.திருப்புகழ் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்து பணிகளை மேற்கொண்டார். இதுவரை 800 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதுவரை மழைநீர் வடிகால் பணிகளில் சுமார் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வரும்காலங்களில் வடகிழக்கு பருவமழையினால் மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக நாளைய தினம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா. சுகுமார், இ.ஆ.ப., திருமதி சி.ஹரிப்ரியா, திருமதி மா.கவிதா, தலைமைப் பொறியாளர் திரு.பி.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை ரூ.5,180 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு : அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: