திருப்பூர், செப்.3: திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஒருவரை பிடித்து கும்பல் ஒன்று சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில் புகார் கொடுக்க யாரும் முன் வராததால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் 1939 எண் கொண்ட டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பாரில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் நேற்று முன்தினம் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சரமாரியாக தாக்கி பாரில் இருந்து இழுத்துச் சென்று சேரை கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் செல்வத்திற்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் பாரில் நடந்த தாக்குதல் வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து வடக்கு போலீசாரிடம் கேட்டபோது, ‘‘எம்.எஸ்.நகர் டாஸ்மாக் பாரில் நடைபெற்ற தாக்குதல் வீடியோ போலீசாரிடம் உள்ளது. போலீசார் சம்பந்தப்பட்ட பாரில் விசாரணை நடத்தினர். ஆனால் தாக்கப்பட்டவர் தரப்பிலும், அல்லது எதிர் தரப்பிலிருந்து எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தால் கட்டாயம் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.
The post டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் புகார் கொடுக்க வராததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறல் appeared first on Dinakaran.