திருப்பூர், ஜன.17: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை மற்றும் அதற்கு பின்புறமாக தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை தினம் தோறும் கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். சராசரியாக நாளொன்றுக்கு 40 டன் காய்கறிகள் வரை இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் சென்று பல்வேறு பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையால் தொடர் விடுமுறை விடப்பட்டதன் காரணமாக திருப்பூரில் உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக நேற்று தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்து இருந்த நிலையிலும் வியாபாரிகள் வருகை குறைந்தால் போதிய அளவு வியாபாரம் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டாலும் கூட வாங்கி செல்வதற்கு ஆட்கள் இல்லை. கொண்டு வந்த காய்கறிகளை அப்படியே கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை முதலே இயல்பு நிலை திரும்பும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
The post உழவர் சந்தையில் காய்கறி விற்பனை மந்தம் appeared first on Dinakaran.