அவிநாசி, ஜன.17: அவிநாசியில் தமிழர் பண்பாடு கலாசார பேரவை அறக்கட்டளை சார்பில் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் மற்றும் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. தமிழர் பண்பாட்டு கலாசார பேரவை தலைவர் நடராசன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். மகளிர் அணி சார்பில் பொங்கல் வைத்தல், கும்மியாட்டத்துடன் விழா தொடங்கியது. அறக்கட்டளை துணைத்தலைவர் அப்புச்சாமி, செயலாளர் முருகேசன், செயலாளர் அருணாசலம், செயற்குழு அப்பர்சாமி, பொது செயலாளர் வெங்கடாசலம், தணிக்கையாளர் அவிநாசி பிரபு, செயலாளர் பரணிபழனிசாமி, பொருளாளர் ராயப்பன், அவிநாசி வட்டார கல்வி அலுவலர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குருநாட்டியாலயா விஷா அய்யர் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ‘இயற்கை வாழ்வியல் வல்லுநர்’. ‘சிறுதானியங்களின் மகத்துவம்’ என்ற தலைப்பில் அப்பன் ஐயா பேசினார். இதனை தொடர்ந்து பாரம்பரிய கிராமிய கலையான கம்பத்தாட்டமும், சிலம்பாட்டம், தந்திரக்கலை நிகழ்ச்சி, பாரத நாட்டியம் நடந்தது. திருப்பூர் நஞ்சப்பா பள்ளி தலைமை ஆசிரியர் தெக்கலூர் பழனிசாமி, ‘தமிழர் பண்பாடும், கலாச்சாரமும்’ என்ற தலைப்பில் பேசினார். சீர்மிகு தமிழர் நாகரிகம், பண்பாடு ‘அன்றும்-இன்றும்’ தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் கோவை சாந்தாமணி பேசினார். சென்னை, சம்பத் வழங்கிய சிரிக்கலாம் வாங்க சிரிப்பு நிகழ்ச்சியும் நடந்தது. நிறைவாக அறக்கட்டளை செயலாளர் அவிநாசி அந்தோணிசாமி நன்றி கூறினார்.
The post தமிழர் பண்பாட்டு கலாச்சார பேரவை சார்பில் அவிநாசியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.