பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிய குழந்தைகள்

 

குமாரபாளையம், செப்.2: உலக கடித தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி குழந்தைகள் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. செல்போன், இ-மெயில் போன்ற மின்னணு கருவிகள் நடைமுறைக்கு வந்ததால் கடிதம், பொங்கல் வாழ்த்து போன்ற தொலை வழி தொடர்புகள் வழக்கொழிந்து போயின. நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத நண்பர்கள், உறவினர்களுக்கு நலம் விசாரித்தும், தகவல்களை தெரிவித்தும் எழுதும் கடித போக்குவரத்தில் இருந்த எதிர்பார்ப்பும், உற்சாகமும் செல்போனிலோ, இ-மெயிலிலோ இல்லாத நிலையில், பள்ளி குழந்தைகளுக்கு கடிதம் எழுதுவது என்பது தெரியாத கலையாகி வருகிறது. இதை போக்கும் வகையில், உலக கடித தினத்தை முன்னிட்டு குமாரபாளையத்தில் விடியல் சேவை அமைப்பினர், இல்லம் தேடி கல்வித்திட்ட குழந்தைகளுக்கு கடிதம் எழுதும் பயிற்சிகளை வழங்கினர்.

குழந்தைகளுக்கு அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டு பெறுநர், அனுப்புனர், முகவரிகள் எழுதவும், நலம் விசாரித்தும் தகவல் தெரிவித்தும், கடிதம் எழுதும் முறை கற்றுக்கொடுக்கப்பட்டது. அட்டைகளை பெற்ற குழந்தைகள் பலர், தங்களது பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு தட்டுத்தடுமாறி கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்தனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. தன்னார்வலர் ஜமுனா, தியாகியின் வீர வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார். கடிதம் எழுதிய குழந்தைகளுக்கு, விடியல் பிரகாஷ் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் பிரியங்கா, தீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிய குழந்தைகள் appeared first on Dinakaran.

Related Stories: