அமெரிக்காவில் முதலீட்டாளர் மாநாடு 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

* சென்னை, கோவை, மதுரையில் 4,100 பேருக்கு வேலை கிடைக்கும்

சென்னை: அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை 28ம் தேதி சென்றடைந்தார்.

மேலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு: நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நோக்கியா நிறுவனமானது பின்னிஷ் பன்னாட்டு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற் றும் நுகர்வோர் மின்னணு நிறுவனமாகும். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

அதன்படி முதல்வரின் முன்னிலையில் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் நிஷாந்த் பத்ரா, நிலையான நெட்வொர்க் வணிகக் குழு தலைவர் சாண்டி மோட்லி ஆகியோர் பங்கேற்றனர்.

பேபால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: பேபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும், இது ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு உதவுகிறது. காசோலைகள் மற்றும் பண ஆணைகள் போன்ற பாரம்பரிய காகித முறைகளுக்கு மின்னணு மாற்றாக இது செயல்படுகிறது. அதேபோல், இந்த நிறுவனம் சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், பேபால் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீனி வெங்கடேசன், சர்வதேச அரசாங்க உறவுகள் தலைவர் ஜி- யாங் டேவிட் ஃபேன் ஆகியோர் பங்கேற்றனர். ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்: ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாகும்.

மேம்பட்ட பேக்கேஜிங், ஐஓடி, லைஃப் சயின்ஸ், ஏஆர்.விஆர், எம்இஎம்எஸ், பவர் உள்ளிட்ட பலதரப்பட்ட சந்தைகளில் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு புதுமைகளை வழங்கும் மேற்பரப்பு மற்றும் பொருட்களை மேம்படுத்தும் அமைப்புகள் (அதாவது வெப்ப செயலாக்கம், ஈரச் செயலாக்கம், பிளாஸ்மா சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு) போன்றவற்றை வழங்குகின்றன. மேலும், அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில், முதல்வர் முன்னிலையில் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ரமாகாந்த் அலபதி, முதன்மை நிதி அலுவலர் பிரபாத் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

மைக்ரோசிப் நிறுவனம்: மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனமானது ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான உட்பொதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையராகும். இது பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு (5G, EV, IOT, தரவு மையங்கள் போன்றவை) ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாட்டான தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையராகும். அரிசோனாவின் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசிப் நிறுவனம், உலகளவில் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகளில் பல உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது.

இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் கடந்த 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் ஐ.சி வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு, பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அந்தவகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், மைக்ரோசிப் நிறுவனத்தின் மூத்த கார்ப்பரேட் துணை தலைவர் பேட்ரிக் ஜான்சன், கார்ப்பரேட் துணை தலைவர் புரூஸ் வேயர் ஆகியோர் பங்கேற்றனர். இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம்: இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஒரு முன்னோடி சுகாதார தொழில்நுட்ப நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்கிட கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.50 கோடி முதலீட்டில் 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த நிகழ்வில், இந்நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் ராதிகா டாண்டன் பங்கேற்றார். அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம்: அப்ளைடு மெட்டீரியல்ஸ் உலகின் நம்பர் 1 குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் நிறுவனம். இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரை கார்ப்பரேட் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளவில் 24 நாடுகளில் 150 நகரங்களில் செயல்பட்டு வரும் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது. இந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த நிகழ்வில், இந்த நிறுவனத்தின் செமிகண்டக்டர் தயாரிப்புகள் குழுமத்தின் தலைவர் பிரபு ராஜா, துணைத் தலைவர் சதீஷ் குப்புராவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் நிஷாந்த் பத்ரா, நிலையான நெட்வொர்க் வணிக குழு தலைவர் சாண்டி மோட்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அமெரிக்காவில் முதலீட்டாளர் மாநாடு 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Related Stories: