தமிழ்நாட்டில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் ஆந்திர மாநிலத்திலும் நம் குடும்பங்களில் தெலுங்கு மட்டுமே பேச வேண்டும்

*தெலுங்கு மொழி தின நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு

திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் தெலுங்கு மொழி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வெங்கடேஸ்வர், இணை கலெக்டர் சுபம் பன்சால், டிஆர்ஓ பென்சல கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கிடுகு ராமமூர்த்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வெங்கடேஸ்வர் பேசியதாவது: அனைவரும் தங்கள் தாய்மொழியை மதித்து அந்த மொழியில் பேச வேண்டும். நமது மொழி தெலுங்கு என்பதால் அந்த மொழியில் பேச பழகிக் கொள்ள வேண்டும். கிடுகு வெங்கட ராமமூர்த்தி 1863 இல் பிறந்தார். அவர் ஆகஸ்ட் 29ம் தேதி ஸ்ரீகாகுளம் மாவட்டம் பர்வதலா பேட்டா கிராமத்தில் வெங்கம்மா வீர்ராஜு தம்பதியருக்கு பிறந்தார்.

அவர் தெலுங்கு மொழியின் நிறுவனர். பல மொழி பேசுபவர். பேச்சு மொழிக்கு உயிர் கொடுத்தவர். தெலுங்கு இலக்கியத்தை எளிமையாக்கவும், தெலுங்கின் அழகை சாமானியர்களிடம் கொண்டு செல்லவும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டார். கிடுகு வெங்கட ராம்மூர்த்தியின் சிறப்பான சேவையின் அடையாளமாக அவரது பிறந்தநாள் தெலுங்கு தாய்மொழி தினமாக கொண்டாடப்படும்.

நமது மொழிக்கு பல்லாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு. தெலுங்கு மொழியின் புகழை அதிகரிக்கவும், வருங்கால சந்ததியினருக்கு தெலுங்கை வழங்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. கிடுகு ராமமூர்த்தியின் பிறந்தநாளையொட்டி மாவட்டம் தோறும் தெலுங்கு மொழி தினத்தை பெரிய அளவில் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் பேசுகின்றனர், நம் மாநிலத்திலும் நம் குடும்பங்களில் தெலுங்கு மட்டுமே பேச வேண்டும்.

நாம் பெருமைப்பட வேண்டும், ஆங்கிலமும் முக்கியம், ஆனால் தெலுங்கும் நமது முக்கிய மொழி என்பதை அங்கீகரிக்க வேண்டும். நம் தெலுங்கு தாய்மொழியை மதித்து, அனைவரும் தெலுங்கு மொழியில் பேச வேண்டும். குழந்தைகள் சிறு வயதிலிருந்தே தெளிவாகப் புரிந்துகொள்ளும் முதல் மொழி தாய்மொழி. நமது ஆந்திர மாநிலத்தின் தாய்மொழி நமது தெலுங்கு மொழி. இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் பல தெலுங்கு மொழி கவிஞர்களை கலெக்டர் கவுரவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட தகவல் தொடர்பு துறை அலுவலர் பால கொண்டையா, கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பிற துறை ஊழியர்கள், தெலுங்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post தமிழ்நாட்டில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் ஆந்திர மாநிலத்திலும் நம் குடும்பங்களில் தெலுங்கு மட்டுமே பேச வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: