டெல்லி: ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கப் பணிகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரவல்லி மலைத்தொடர் ராஜஸ்தான் முதல் ஹரியானா, குஜராத், டெல்லி ஆகிய பகுதிகள் வரை சுமார் 300 மைல்கள் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் சுரங்கம் தோண்டுவது தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம். மலைத்தொடர் குறித்து மறுவரையறைகளை கடந்த வாரம் வழங்கியது. ஒன்றிய அரசின் பரிந்துரைகளை தொடர்ந்து புதிய வரையறையின் கீழ், சுற்றியுள்ள நிலப்பரப்பில் இருந்து குறைந்தது 100 மீட்டர் உயரத்தில் இருக்கும் நிலப்பரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலை என்று அழைக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வட இந்தியாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
உள்ளூர் மக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிபுணர் குழு அறிக்கை மற்றும் நீதிமன்ற கருத்துக்கள் தவறாகப் பொருள் கொல்லப்படுவதாக கவலை தெரிவித்த தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கப் பணிகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவ்விவகாரம் குறித்து ராஜஸ்தான், அரியானா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
