புதுடெல்லி: இந்தியாவில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், மருந்து எதிர்ப்பு சக்தி குறைபாடு என்பது முக்கிய மருத்துவச் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆண்டிபயாடிக் மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், ‘நிமோனியா மற்றும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் தற்போது செயலற்றுப்போவது பெரும் கவலையளிக்கிறது; மக்கள் சாதாரண காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்குக் கூட மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வதே, கிருமிகள் மருந்து எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு முக்கிய காரணமாகும்’ என்று குறிப்பிட்டார்.
இதை ஆதரித்துப் பேசிய டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்படும் பல நோயாளிகளுக்குத் தற்போது எந்த மருந்தும் பலனளிக்காத ஆபத்தான நிலை உள்ளது; எனவே காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு அல்லது சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்’ என்றா ர். இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் பேசுகையில், ‘தேவையற்ற ஆண்டிபயாடிக் பயன்பாட்டால் உயிர் காக்கும் மருந்துகள் தங்கள் சக்தியை இழந்து வருகின்றன; எனவே மருத்துவர்கள் நிலையான விதிமுறைகளின்படி பொறுப்புடன் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
