தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு


சென்னை: தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சிக்கு, வரும் 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2024-25 ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவியரும் விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியர் பயிற்சிக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இயக்குநர் (பொ), தொற்று நோய் மருத்துவமனை, எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில், வரும் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் ரூ.50 பணமாக செலுத்தி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: