ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்தவர் கைது: டிராக்டர் பறிமுதல்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே நேற்றிரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மணல் உள்பட பல்வேறு கனிம வளங்களை கடத்திவந்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாசப் பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், நேற்றிரவு ஆர்.கே.பேட்டை அருகே எஸ்ஐ (பயிற்சி) ஆகாஷ்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலம், என்.ஆர்.பள்ளி பகுதியிலிருந்து ஆற்று மணலை டிராக்டரில் ஏற்றி வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆந்திராவில் இருந்து தமிழக பகுதிகளுக்கு உரிய ஆவணங்களின்றி ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி (32) என்பதும், இவர் அடிக்கடி ஆந்திர பகுதிகளுக்கு டிராக்டரில் சென்று, அங்கிருந்து தமிழக பகுதிகளுக்கு ஆற்றுமணலை கடத்தி வந்து விற்பனை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆற்றுமணலை கடத்தி வந்த மணி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்தவர் கைது: டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: