நெல்லை மாவட்டத்தில் 7.11 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

*கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

நெல்லை : தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை முன்னிட்டு தச்சநல்லூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். தொடர்ந்து அனைவரும் குடற்புழு நீக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 1 முதல் 19 வயது வரையுள்ள 5 லட்சத்து 49 ஆயிரத்து 813 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 844 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 30ம் தேதி (வெள்ளி) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகள், 20 வயது முதல் 30 வயது வரையுள்ள பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. குடற்புழு மாத்திரை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ரத்த சோகை தடுக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத் திறன், உடல் வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. முகாம்களில் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், 20 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள், கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் கீதாராணி, மாநகர சுகாதார நல அலுவலர் டாக்டர் ராணி, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர்கள் டாக்டர் சங்கர், அனார்கலி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நெல்லை மாவட்டத்தில் 7.11 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: