நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலை! ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு: வைகோ கண்டனம்

சென்னை: நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மற்றும் இவரது மனைவி சாந்தி. விவசாய கூலித்தொழிலாளர்களான இவர்களது இரண்டாவது மகன் தனுஷ் கடந்த 2021ஆம் வருடம் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து, இரண்டு ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதி வந்தார். அதில், அவர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், நேற்று காலை பெற்றோர் கூலிவேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தனுஷ், தனது வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

2017 ஆம் ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தொடங்கி, இதுவரையில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மாணவர்களை மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு தள்ளுவது கடும் கண்டனத்தை உரியது தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்பு வட மாநிலங்களிலும் எதிரொலிக்க தொடங்கிய நிலையில், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலைக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும். இனியும் அலட்சியப்படுத்தாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலை! ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: