பண்டிகை காலம் நெருங்குவதால் கொப்பரை விலை கிலோ ரூ.100க்கு விற்பனை

 

ஈரோடு, ஆக. 17: கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஆவணி மாத முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட காரணங்களால் தேங்காய் தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும், கொப்பரை தேங்காய் தேவையானது வடமாநிலங்களில் அதிகரித்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக விலை உயர்ந்து வருகின்றது. ஒரு டன் தேங்காய் கடந்த வாரம் ரூ.29 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் தற்போது டன் ரூ.31 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

மேலும், தேங்காய் தேவை உள்ளதால் இந்த விலை உயர்வானது இன்னும் ஒரு வாரகாலத்திற்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, அவல்பூந்துறை, எழுமாத்தூர், சிவகிரி, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம், சொசைட்டிகளில் கொப்பரை தேங்காய் ஏல விற்பனை நடந்து வருகிறது.

தமிழக வியாபாரிகள் தவிர கேரளா, கர்நாடகா வியாபாரிகள், ஆயில் மில் உரிமையாளர்கள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வாரத்தில் கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.100க்கு விற்பனையானது. அதிகபட்ச விலையாக கிலோ ரூ.101.60 வரை விற்பனையானது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு வாரகாலத்திற்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வானது தென்னை விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

The post பண்டிகை காலம் நெருங்குவதால் கொப்பரை விலை கிலோ ரூ.100க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: