வாலாஜாபாத், குன்றத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு சாதனையாளர் விருது

வாலாஜாபாத்: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாலாஜாபாத், குன்றத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில், வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியம் காரை, பூசிவாக்கம், ஒழையூர், புதுப்பாக்கம், முத்தியால்பேட்டை ஆகிய ஊராட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில், சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது.

இதில், கால்நடை மற்றும் பஞ்சாயத்துராஜ் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் கலந்துகொண்டு, காரை ஊராட்சி வள்ளியம்மாள்செல்வம், பூசிவாக்கம் ஊராட்சி லெனின்குமார், முத்தியால்பேட்டை ஊராட்சி அன்பழகன், ஒழையூர் ஊராட்சி குமரகுரு, புதுப்பாக்கம் ஊராட்சி மஞ்சுளாபரணி, குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சி கலா ராஜமாணிக்கம் ஆகிய ஊராட்சி தலைவர்களுக்கு சாதனையாளர் விருதை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, விருது பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறுகையில், ‘கிராமங்கள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

அதற்காக கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் தண்ணீர் சேகரிக்க புதிய குளம் உருவாக்குதல், தெருக்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் துாய்மை பணிகள் செய்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளை செய்துள்ளோம். இதனை உற்சாகப்படுத்தும் வகையில் வழங்கப்பட்ட இந்த சாதனையாளர் விருது எங்களையும் எங்கள் ஊராட்சிகளை சார்ந்த மக்களையும் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது’ என்றனர்.

The post வாலாஜாபாத், குன்றத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு சாதனையாளர் விருது appeared first on Dinakaran.

Related Stories: