பட்டாசு ஆலை விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ்கோபி உறுதி

சிவகாசி: பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகாசியில் ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ்கோபி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ்கோபி பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கலந்தாய்வு கூட்டத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகள், அறிக்கையாக தயார் செய்யப்பட்டு அமைச்சர் பியூஸ்கோயலிடம் கொடுக்கப்படும். பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களை தடுக்கவும், குறைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த விபத்துக்கான காரணம் குறித்த முழு அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இனி வரும் காலங்களில் இந்த தாமதம் கூடாது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பெரும் அளவில் வருமான பாதிப்பு ஏற்படுகிறது.  வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அப்படி செய்ய வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சிகள் எதிர் சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் சரியாக புரிந்து கொண்டு இதனை கேட்க வேண்டும். கேட்க கூடியதை தான் ஒன்றிய அரசிடம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் பகுதியில் இயங்கும் பட்டாசு ஆலையில் சுரேஷ்கோபி ஆய்வு செய்து தொழிலாளர்களுடன் கலந்தாய்வு செய்தார்.

* கதவுகளை பூட்டி 37 பேரிடம் மட்டுமே கலந்தாய்வு கூட்டம்
சிவகாசியில் தனியார் விடுதியில் நேற்று காலை 11 மணியளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் 1,078 பட்டாசு ஆலைகள், 1,800 பட்டாசு கடைகள் இருந்த போதிலும் 37 பேர் மட்டுமே கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர். கதவுகளை பூட்டி சுமார் 3 மணி நேரம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதனால் பாஜவினர் ஒவ்வொருவராக நைசாக கழன்று சென்று விட்டனர்.

The post பட்டாசு ஆலை விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ்கோபி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: