கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், ஆலமூடு இசக்கியம்மன் கோயில், மாவட்டத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில்கள், ஆதி பராசக்தி கோயில்கள், முத்தாரம்மன் கோயில்கள் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழக்குடி அவ்வையாரம்மன் கோயிலில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் வந்து கொழுக்கட்டை படையல் வைத்து அம்மனை வழிபாடு செய்வார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. அதே போல் இன்று ஆடி கடைசி செவ்வாய்கிழமையையொட்டி பெண்கள் குவிந்தனர். ஆட்டோக்கள், கார்கள், பைக்குகளில் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
அவர்கள் கோயில் மண்டபத்தில் கூழ், கொழுக்கட்டை சமைத்து, அம்மனுக்கு வழிபாடு செய்தனர். தோவாளை கால்வாயில் தண்ணீர் செல்வதால், பக்தர்கள் அதில் நீராடி மகிழ்ந்தனர். திருமணமாகாத கன்னிப்பெண்கள் இங்கு வந்து வழிபட்டால், மனதுக்கு பிடித்த மணமகன் கிடைப்பான் என்று நம்பிக்கை உள்ளது. மேலும் திருமணமான புதுமண தம்பதிகள், குழந்தை பேறு இல்லாத பெண்கள் வந்து வழிபட்டால், குழந்தைபேறு நிச்சயம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல், முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கும், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பஸ்கள், முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் நின்று செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் இல்லாமல் பயணித்தனர்.
The post ஆடி கடைசி செவ்வாய் குமரி அம்மன் கோயில்களில் பெண்கள் குவிந்தனர்: அவ்வையாரம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபாடு appeared first on Dinakaran.