ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க காத்திருந்ததாக பிரபல கூலிப்படை தலைவன் முருகேசன் துப்பாக்கி முனையில் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னை: மடிப்பாக்கம் செல்வம், செங்குன்றம் பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல கூலிப்படை தலைவன் முருகேசனை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்க காத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வகையில் கூலிக்கு ஆட்களை அனுப்பி கொலைகளை செய்து வரும் கூலிப்படை தலைவர்களின் பட்டியலை எடுத்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்து வருகின்றனர். மேலும், ஏ பிளஸ், ஏ மற்றும் பி கேட்டகிரியில் உள்ள ரவுடிகளை கண்காணித்து அவர்கள் மீது நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில் தனிப்படையினர் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல கூலிப்படை தலைவரான முருகேசன் ஏ கேட்டகிரி ரவுடிகள் பட்டியலில் உள்ளார். இவர் பிரபல வடசென்னை ரவுடியான பாம் சரவணன் கூட்டாளி ஆவார். பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருக்கமான முருகேசன் மீது திமுக பிரமுகரான மடிப்பாக்கம் செல்வம், அதிமுக பிரமுகரான செங்குன்றம் பார்த்திபன் ஆகியோர் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாவர். முருகேசன் சக ரவுடிகளுக்கு கூலிக்கு ஆட்களை அனுப்பி பல கொலைகளை செய்து வந்தவர்.இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்ததால், தனிப்படை போலீசார் கூலிப்படை தலைவரான முருகேசனை கடந்த ஒரு மாதங்களாக தேடி வந்தனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க சில ரவுடிகள் திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகர உளவுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதற்கிடையே கூலிப்படை தலைவன் முருகேசன் சென்னை அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் கூலிப்படை தலைவன் முருகேசனை நேற்று இரவு கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேநேரம் கூலிப்படை தலைவன் முருகேசன் சென்னையில் கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, முருகேசனை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க காத்திருந்ததாக பிரபல கூலிப்படை தலைவன் முருகேசன் துப்பாக்கி முனையில் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: