அரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி?: சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலிடம் ஆலோசனை நடத்த முடிவு

புதுடெல்லி: அரியானா சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதால் மணீஷ் சிசோடியா மீண்டும் டெல்லி துணை முதல்வராவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம்ஆத்மி மூத்த தலைவரான கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதியின் எம்எல்ஏவான மணீஷ் சிசோடியா, கடந்தாண்டு பிப்ரவரி 26ம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் கலால், நிதி, பொதுப்பணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 18 முக்கிய துறைகளை கையாண்டார். மணீஷ் சிசோடியாவுக்கு முன்பாக அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும் சிறை சென்றதால், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

இந்நிலையில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் 17 மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தற்போது சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தில் சிறையில் உள்ள முதல்வர் கெஜ்ரிவாலிடம் ஆலோசனை நடத்திய பிறகே, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மணீஷ் சிசோடியா எப்போது அமைச்சராவார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பரத்வாஜ் கூறுகையில், ‘மணீஷ் சிசோடியா அமைச்சரவையில் மீண்டும் இணைவார். இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்’ என்றார்.

சிக்கலில் உள்ள டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு, மணீஷ் சிசோடியா மீண்டும் அமைச்சரவைக்கு திரும்புவது புதிய தெம்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய உத்வேகத்துடன் ஆம்ஆத்மி களமிறங்கும். அதேநேரம் அடுத்தாண்டு ெடல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான பணிகளும் தொடங்கப்படும் என்று ஆம்ஆத்மி தலைவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘முதல்வரே சிறையில் இருப்பதால் அமைச்சரவையில் எப்படி மாற்றம் நடக்கும்?’ என்றார்.

 

The post அரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி?: சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலிடம் ஆலோசனை நடத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: