தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வெப்பநிலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, கடலூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை கனமழைக்கு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30-40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30-40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுநாள், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள் வரும் 13ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: