பழங்குடியினர் இன்னும் பின்தங்கியே உள்ளனர்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு

திருமலை: ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் உள்ள தும்மலப்பள்ளி கலாக்ஷேத்திரத்தில் உலக பழங்குடியினர் தினவிழா நடந்தது. விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். இதில் ஆதிவாசிகள் பாரம்பரிய உடைகள் மற்றும் அலங்கார வழங்கி அவரை வரவேற்றனர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆதிவாசிகள் அல்லூரி சீதாராமராஜையும், ஏகலவ்யாவையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அல்லூரி சீதாராமராஜ் தனது உயிரை தியாகம் செய்தார். திரவுபதி முர்மு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி குடியரசு தலைவரானார். அவர் படிப்படியாக வளர்ந்ததை ஒரு உத்வேகமாக எடுத்து கொள்ளவேண்டும்.

ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக பழங்குடியினர் அதிகம் வாழும் நாடு இந்தியா. நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும் பழங்குடியினர் இன்னும் பின்தங்கியே உள்ளனர். நீங்கள் அனைத்து துறைகளிலும் முன்னோக்கி இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை மேம்படுத்த வேண்டும். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த நாளை கடைபிடிக்கவில்லை. ஆதிவாசிகள் தைரியம், இயல்பான திறமை மற்றும் அறிவு திறமை உள்ளவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post பழங்குடியினர் இன்னும் பின்தங்கியே உள்ளனர்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: